ஏசாயா
ஏசாயா - "மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள்; தண்டனை மற்றும் மீட்பு"
தீர்க்கதரிசிகளின் புத்தகத்தைக் குறித்த குறிப்புகள்:
வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளின் புத்தகம் மொத்தம் 17 ஆகும். அதில் புலம்பல் புத்தகம் எரேமியாவால் எழுதப்பட்டதால், ஏசாயா முதல் மல்கியாவரைக்கும் நபர்களாக தீர்க்கதரிசிகள் 16 பேராவார்கள். இந்தத் தீர்க்கதரிசிகளின் காலங்கள் 3 தன்மைகளில் வேறுபட்டவைகளாக இருக்கின்றன. ஒன்று, ராஜாக்களின் நாட்களில் வந்தவர்கள் (7 பேர்-இஸ்ரவேல் மற்றும் யூதாவின் சிறையிருப்பிற்கு முன்வந்தவர்கள்), இரண்டு, சிறையிருப்பின் நாட்களில் வந்தவர்கள் (5 பேர்-பாபிலோனில் 70 ஆண்டுகள் சிறையிருப்பு), மூன்று, சிறையிருப்பிற்குப் பிறகு வந்தவர்கள் (4 பேர்-70 வருட சிறையிருப்பு முடிந்த பிறகு).
நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, ஆகாய், சகரியா, மல்கியா தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் எஸ்றா மற்றும் நெகேமியாவின் புத்தகங்களோடு வரவேண்டியவைகளாக இருக்கின்றன. தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. பெரிய தீர்க்கதரிசனப் புத்தகங்கள் (5), சிறிய தீர்க்கதரிசனப் புத்தகங்கள் (12). நபர்களின் அடிப்படையில் அல்ல. மாறாக புத்தகங்களின் அளவை வைத்துத்தான் இப்பிரிவுகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன, தீர்க்கதரிசிகள் அனைவரும் தேவனுடைய பார்வையில் சமமானவர்களாகவே இருக்கிறார்கள் (பெரியவர்கள் சிறிவர்கள் என்ற ஏற்றத்தாழ்வு இல்லை).
தீர்க்கதரிசிகள்:
- விக்கிரகஆராதனையை விட்டு மனந்திரும்புமாறு அறைகூவல் விடுத்தார்கள்.
- தைரியமாகப் பேசினார்கள் (ராஜாக்களிடமும், மக்களிடமும்).
- தேவனுக்கென்று தங்களை அர்ப்பணித்தவர்களாக இருந்தார்கள்.
- தேவனுடைய இதயத்துடிப்பை அறிந்து, அவருடைய சத்தத்தைக் கேட்டு செயல்பட்டார்கள்.
தீர்க்கதரிசனத்தின் 2 வகைகள்:
- உண்மை நிலையை மக்களுக்குச் சுட்டிக்காட்டுவது
- வருங்கால நிகழ்வுகளை முன்னறிவிப்பது.
ஏசாயா
இப்பொழுது ஏசாயாவின் புத்கத்தைக்குறித்துப் பார்க்கலாம். வேதாகமத்திலே முக்கியமான தீர்க்கதரிசனப் புத்தகங்களில் ஒன்றாக இது இருக்கிறது. முழுவேதாகமத்தையும் புரிந்துகொள்வதற்கு மிகவும் உதவக்கூடிய புத்தகமாக இது இருக்கிறது.
முகவுரை:
ஏசாயாவின் புத்தகம் முழுவேதாகமத்தின் ஒரு சுருக்கத்தைப்போல இருக்கிறது. வேதாகமத்தில் 66 புத்தகங்கள் இருப்பதுபோல ஏசாயாவிலும் 66 அதிகாரங்கள் இருக்கின்றன. ஏசாயாவின் புத்தகம் புதியஏற்பாட்டில் 66 முறை சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது, இது இரண்டு பாகங்களாக பிரிக்கப்படலாம். முதலாவது பாகம் அதிகாரம் 1 முதல் 39 வரை. இது பழையஏற்பாட்டின் 39 புத்தகங்களுக்கு அடையாளமாக இருக்கிறது. பழையஏற்பாடு குறிப்பாக தேவனுடைய நியாயத்தீர்ப்பை முக்கியப்படுத்துகிறது. அதைப்போலவே இந்தப் புத்தகத்தில் முதல் 39 அதிகாரங்கள் நியாயத்தீர்ப்புகளால் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இரண்டாவது பாகம் அதிகாரம் 40 முதல் 66 வரை, மீதமுள்ள 27 அதிகாரங்களை உள்ளடக்குகிறது. இது புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களுக்கு அடையாளமாக இருக்கிறது. புதியஏற்பாடு தேவனுடைய கிருபையையும், இரக்கத்தையும் நம்பிக்கையையும் முக்கியப்படுத்துகிறது. அதைப்போலவே கடைசி 27 அதிகாரங்களும் தேவனுடைய கிருபை, இரக்கம் மற்றும் நம்பிக்கையால் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இரண்டு பாகங்களுக்குமிடையே உள்ள வேற்றுமை மிகவும் தெளிவாக இருக்கிறது. இரண்டாவது பாகத்தின் முதல் அதிகாரமாகிய 40ஆவது அதிகாரம் முதல் வசனம், என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள் என்ற வார்த்தைகளோடு ஆரம்பிக்கிறது. மேசியாவைக் குறித்த வாக்குத்தத்தமும், அவர் பாடுபடுகிற பணிவிடைக்காரனாக வந்து, முடிசூட்டிப்படுவார் (முற்கிரீடம்) என்பதை முன்னறிவித்திருக்கிறது. எபிரேயர்-11: 37ன்படி மனாசேயின் மூலம் மரத்தை அறுக்கும் ரம்பத்தால் ஏசாயா கொல்லப்பட்டார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம் (எபி-11: 32, 37 தீர்க்கதரிசிகளையுங் குறித்து, வாளால் அறுப்புண்டார்கள்). எரேமியா கல்லால் எறிந்து கொல்லப்பட்டார், எசேக்கியேல், குதிரைக்குப் பின்னால் கட்டியிழுத்துச் செல்லப்பட்டு மூலை சிதறி, அல்லது தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.
அப்-7: 52 தீர்க்கதரிசிகசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப் படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள்.
ஏசாயாவின் புத்தகம் யாரால் எழுதப்பட்டிருக்கும் என்பதில் பல மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. காரணம், முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே காணப்படுகிற முற்றிலும் மாறுபட்ட வெளிப்பாடுதான். மேசியாவைக்குறித்தும், அவருடைய பாடுகளைக்குறித்தும் மிகத்துல்லியமாக எழுதப்பட்டிருப்பது, பிந்தைய நாட்களில் வேறுயாரோ இதை எழுதி ஏசாயாவின் முதல் பாகத்தோடு இணைத்திருப்பார்கள் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் வேதாகமம் சொல்கிற வார்த்தைகளைவைத்தே ஏசாயாதான் இதை எழுதியிருக்கிறார் என்று நாம் அறிந்து கொள்கிறோம்.
ஏசா-40: 3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள், 5. என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
மத்-3: 3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே.
ஏசா-65: 1 என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன், என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.
ரோம-10: 20 அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.
ஏசாயாவின் புத்தகத்தில் இஸ்ரவேலின் பரிசுத்தர் என்ற வார்த்தை 21 முறை வந்திருக்கிறது. அதேபோல நானே கர்த்தர் என்ற வார்த்தையும் 21 முறை வருகிறது.
திரித்துவத்திற்கான ஆதாரக்குறிப்பைக் கொடுக்கும் வசனத்தை நாம் ஏசாயாவில் பார்க்கிறோம்.
ஏசா-40: 3, 7 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், 7. கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும் போது, புல் உலர்ந்து, பூ உதிரும், ஜனமே புல்.
ஏசா-48: 16 நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள், நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை, அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன், இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.
ஏசாயாவின் தொகுப்பு
(மொத்தம் 66 அதிகாரங்கள் உள்ளன. 3 பிரிவுகளாகப் பார்க்கலாம்)
- அதிகாரங்கள் 1 முதல் 35: நியாயத்தீர்ப்போடு தொடர்புடைய செய்திகள்:
அ. யூதாவுக்கு விரோதமான தீர்க்கதரிசனம் (1-12)
- யூதாவுக்கு (1: 2-20)
- எருசலேமிற்கு (1: 21-31)
- யூதா மற்றும் எருசலேமைக்குறித்த வார்த்தை (2-5)
- வரவிருக்கும் மேசியாவைக் குறித்த முகவுரை (6-12)
- கர்த்தரின் தரினம் (6)
- கன்னியின் மூலம் பிறக்கும் அடையாளம் (7)
- இம்மானுவேல், இடறுதலுக்கேதுவான கல் (8)
- பாலகன் பிறப்பது (9: 1-7)
- சத்துருக்களை அழிக்கும் வெளிச்சம் (9: 8 முதல் 10: 34)
- துளிர், கிளை, வேர், கடைசிநாட்கள் (11)
- பரிசுத்தர் (12)
ஆ. பிற தேசங்களுக்கு விரோதமான தீர்க்கதரிசனம் (13-23)
(சுமார் 12 புறஜாதி தேசங்களைக்குறித்து தேவன் முன் அறிவித்திருக்கிறார்)
இ. கர்த்தருடைய நாள் (24-27)
- உபத்திவரகாலம் (24)
- தேவராஜ்யத்தின் காலம் (25-27) ஆயிரவருட அரசாட்சி
ஈ. ஐயோ என்ற வேதனைகளும், ஆசீர்வாதங்களும் (28-35)
ஏசா-29: 1 தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! அரியேல் என்பது எருசலேமைக் குறிக்கிறது.
- அதிகாரங்கள் 36 முதல் 39 எசேக்கியா ராஜாவின் சரித்திர சம்பவங்கள்:
- சனகெரிப்பின் பெருமை (36)
- தேவனுடைய குறுக்கிடுதல் (37)
- எசேக்கியா வியாதிப்படுதல் (38)
- எசேக்கியாவின் பாவம் (39)
III. அதிகாரங்கள் 40 முதல் 66: கிருபை மற்றும் இரக்கத்தோடு தொடர்புடைய செய்திகள்:
அ. தேவனைக்குறித்த வெளிப்பாடு (40-48)
- இஸ்ரவேலின் மீட்பு (40: 1-11)
- தேவனுடைய குணாதிசயம் (4: 12-31)
- தேவனுடைய மகத்துவம் (41)
- தேவனுடைய வேலையாள் (42)
- இஸ்ரவேல் புதுப்பிக்கப்படுதல் (43-44)
- தேவன் கோரேஸைப் பயன்படுத்துதல் (45)
- பாபிலோனின் அழிவு (46-48)
ஆ. மேசியாவைக்குறித்த வெளிப்பாடு (49-53)
† மேசியாவின் ஊழியம், கீழ்படிதல் (49-50)
† மேசியாவின் ஊக்கப்படுத்துதல் (51 முதல் 52: 12)
† மேசியாவின் பாவிநிவிர்த்தி (51: 13 முதல் 53)
† மேசியாவின் வாக்குத்தத்தம் (54)
† மேசியாவின் அழைப்பு (உலகத்திற்கு) (55-57)
இ. மகிமையான எதிர்காலம் (58-66)
† ஆராதனையின் ஆசீர்வாதம் (58)
† இஸ்ரவேலரின் பாவம் சரிசெய்யப்படுதல் (59)
† கிறிஸ்துவின் ராஜ்யத்தில் இஸ்ரவேல் (60)
† கிறிஸ்துவின் வருகை (61)
† எருசலேமின் வருங்காலம் (62)
† அந்திக்கிறிஸ்துவின் ராஜ்யத்தின்மீது தேவனுடைய பழிவாங்குதல் (63: 1-6)
† மீந்திருப்போரின் ஜெபம் (63: 7 முதல் 64)
† தேவன் ஜெபத்திற்குப் பதிலளித்தல் (65: 1-16)
† சரித்திரத்தின் மகிமையான முழுமையடைதல் (65: 17 முதல் 66)
ஏசா-65: 17 இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன், முந்தினவைகள் இனி நினைக்கப் படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.