யாத்திராகமம்

யாத்திராகமம் - "மோசே இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுவித்தல்; சீனாய் மலையில் உடன்படிக்கை"

 

முகவுரை:

யாத்திராகமத்திலிருந்து உபாகமம் வரையில் உள்ள 4 புத்தகங்கள் கி.மு. 1571 முதல் 1451 வருடங்களை உள்ளடக்குகின்றன. யாத்திரை அல்லது பயணம் என்பது இந்தப் புத்தகத்தின் தலைப்பிற்கு அர்த்தமாகும். யாத்திராகமம் என்றால் வெளியேறிச் செல்லுதல் என்று பொருள்படும். பயணங்களின் புத்தகம் என்று நாம் இதை அழைக்கலாம். யாத்திராகமத்தில் 82 வருடகால சரித்திரத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. யாத்திராகமத்தின் முக்கியத் தலைப்பு தேசளாவிய மீட்பு அல்லது விடுதலை. எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்கப்படுதலில் ஆரம்பித்து, சீனாய் மலையில் கர்த்தருடைய சந்திப்போடு யாத்திராகமம் முடிவடைகிறது. யோசேப்பின் மரணத்தோடு ஆதியாமம் முடிவடைந்தது. பிறகு பலஆண்டுகள் கழித்து, மோசேயின் பிறப்போடு யாத்திராகமம் ஆரம்பிக்கிறது. மோசே கி.மு.1559ல் பிறந்து, 80 ஆண்டுகள் கழித்து தோராயமாக கி.மு. 1446ல் எகிப்தைவிட்டு வெளியேறுதல் நடைபெற்றது.

யாத்திராகமத்தின் சிறப்புகள்

1.தேவனைக்குறித்து

  • ஆதியாகமத்திலே, தூரமாயிருந்து செயல்பட்ட சர்வவல்ல தேவன், யாத்திராகமத்திலோ கூடவே வருகிற தேவனாக வெளிப்படுகிறார்.
  • தூரத்திலிருந்து செவிகொடுத்த தேவன், யாத்திராகமத்தில் “ஷெக்கின்னா (வாசம்பண்ணுதல்) மகிமையால்” தம் ஜனத்தின் நடுவிலே வாசம் பண்ணுகிறவராக வெளிப்படுகிறார்.
  • நான் அல்லது நானே கர்த்தர் என்ற வார்த்தை முக்கியப் படுத்தப்பட்டிருக்கிறது (சுமார் 16 முறை நான் கர்த்தர், அல்லது நானே கர்த்தர் என்று தேவன் தன்னைக்குறித்துச் சொல்லியிருக்கிறார். உதாணரத்திற்கு: யாத்-6: 2,7,8,29, 7:5,17, 8:22, 10:2, 12:12, 14:4,18, 15:26, 16:12, 20:2, 29: 46,46.
  • கர்த்தர் என்ற நாமம் 386 முறை வருகிறது. ஒரு அதிகாரத்திற்கு குறைந்தது சராசரியாக 10முறை என்ன விகிதத்தில், நான் கர்த்தர் என்று தன்னை வெளிப்படுத்தி, முக்கியப் படுத்தியிருக்கிறார். நாம் அல்ல, அவரே நம்மை முற்றிலும் நடத்தவேண்டும் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. அவர் பெருகவேண்டும், நாம் சிறுகவேண்டும், அவரே நம்மை நடத்திச் செல்லவேண்டும். தேவன் என்பது அவருடைய தகப்பனாக அவருடைய பாசத்தையும், கர்த்தர் என்பது அவருடைய ராஜாவாக அவருரடைய ஆளுகையையும் குறிக்கிறது.

2. இஸ்ரவேலரைக்குறித்து

  • வளமான ஆற்றுப் பாசனத்தலிருந்து, வனாந்தரத்திற்குச் சென்றார்கள்
  • பூமிக்குரிய இயற்கை உணவிலிருந்து, வானத்தின் இயற்கைக்கு அப்பாற்பட்ட மன்னாவைப் புசித்தார்கள்
  • அடிமைத் தனத்தில் இருந்து விடுதலைக்குள் வந்தார்கள்
  • நம்பிக்கை இண்மையில் இருந்து நம்பிக்கைக்குள் பிரவேசித்தார்கள்
  • எகிப்தியருக்கு வேலை செய்வதிலிருந்து தேவனுக்கு பணிவிடை செய்வதற்கு உரியவர்களானார்கள்.

இஸ்ரவேலர்கள் எகிப்திற்குள் வரும்போது 70 பேராக வந்தார்கள் (யாத்-1: 5 யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்பப்பிறப்பாகிய யாவரும் எழுபது பேர்). தேவன் முன்னறிவித்திருந்த 400 வருடங்கள் (ஆதி-15: 13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய்) நிறைவேறி, 430 ஆவது வருடத்தில் (யாத்-12: 40,41 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம்) அவர்கள்

எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது ஆண்கள் மாத்திரம் ஏறக்குறைய 6 லட்சத்திற்கு மேற்பட்டவர்களாகப் பெருகியிருந்தார்கள். யாத்-12: 37 இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள், அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள். பார்வோன் இஸ்ரவேலரை அழிக்க நினைத்தான். தேவனோ அவர்களைப் பெருகச்செய்தார்.

யாத்-1: 12 ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள். யாராவது தேவஜனங்களை அழிக்க நினைத்தால், அது தேவஜனங்கள் இன்னும் பெருகுவதற்குத்தான் காரணமாகும்.

யாத்திராகமத்தின் தொகுப்பு:

(மூன்று பிரிவுகளாக நாம் இதைப் பிரிக்கலாம்)

  1. அதிகாரங்கள் 1 முதல் 18: எகிப்திலிருந்து மீட்கப்படுதல் (மோசேயின் தலைமைத்துவம்)

அதிகமாக ஒடுக்கப்பட்டு முறையிட்டபோது, தேவன் அர்களுடைய உபத்திரவத்தைப் பார்த்து, அவர்களுடைய கூக்குரலைக் கேட்டார். யாத்-2: 23 இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக் கொண்டிருந்தார்கள், அவர்கள் அடிமைத் தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது

மோசேயை அழைத்து, அவனை உருவாக்கி மக்களை விடுவிப்பதற்குப் பயன்படுத்தினார்

மோசேயின் வாழ்வு 3 கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கப்படலாம்:

  1. முதல் 40 வருடங்கள்: ராஜகுடும்பத்தில் ஒரு குறைவுமின்றி வாழ்ந்தார்.
  2. 41 முதல் 80 வயது வரை: மீதியான் தேசத்திற்குச் சென்று ஆடுமேய்த்தார்.
  3. 81 முதல் 120 வயது வரை: இஸ்ரவேலரின் முதல் தலைவராக இருந்தார்.

அப்-7: 27 பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்? (40 வயதின் முடிவில், மோசே தன் ஜனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை)

அப்-7: 35 உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தாரிசனமான தூதனாலே, தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். (80 வயதின் முடிவில், தேவனே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்).

இந்தப் பகுதியில் முக்கியமாக, இஸ்ரவேலை விடுவித்து, வெளியே கொண்டுபோவதற்காக தேவனால் வரவிடப்பட்ட 10 வாதைகளைக் குறித்துப்பார்க்கிறோம்.

  1. தண்ணீர் இரத்தமாக மாற்றப்பட்டது (7: 14-24) ஏழு நாட்கள்
  2. தவளைகள் (7: 25 முதல் 8: 12)
  3. புழுதியிலிருந்து பேன்கள் (8: 16-19) மந்திரவாதிகள் தோற்றார்கள் (ஜீவனைப் பிறப்பிக்க முடியவில்லை)
  4. பேன்கள் (8: 2-32)
  5. மிருகஜீவன்களுக்கு கொள்ளைநோய் (9: 1-7)
  6. எரிபந்தமான கொப்புளங்கள் (9: 8-12)
  7. கல்மழை (பனிக்கட்டி மழை) (9: 13-35)
  8. 8. வெட்டுக்கிளிகள் (10: 1-20)
  9. காரிருள் (10: 21-29) மூன்று நாட்கள்
  10. எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் கொல்லப்படுதல் (11 மற்றும் 12: 1-10)

ஒவ்வொரு வாதையின் மூலமும் மனந்திரும்புவதற்கான வாய்ப்பை தேவன் பார்வோனுக்குக் கொடுத்தார். ஆனாலும் பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டுக்கொண்டே சென்றது. கடைசி நாட்களில் அந்திக்கிறிஸ்துவின் காலத்திலும் இதேபோன்ற காரியம் நடக்கும்.

  1. அதிகாரங்கள் 19 முதல் 24: நியாப்பிரமாணங்கள் கொடுக்கப்படுதல் (ஒழுக்கநெறி, ஆசாரிப்புக்கூடாரம் மற்றும் ஆசாரிய ஊழியத்திற்கான ஆலோசனைகள்)

தாம் விரும்புவதையும், தாம் விரும்பாதவைகளையும், மனிதனுக்கு தேவையானவைகளையும், தேவையற்றவைகளையும் தேவன் எழுதிக்கொடுத்து, மனிதன் அவைகளை அறிந்து, கைக்கொள்ளவேண்டும் என்பதற்காக கொடுத்தார். நியாயப்பிரமாணம் நம்மை நீதிமானாக்கவில்லை, மாறாக நீதியைக்குறித்தும் அநீதியைக் குறித்தும் நமக்குக் கற்பிக்கின்றன. தேவனுடைய உதவி இல்லாமல் மனிதன் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளமுடியாது என்பதை உறுதிப் படுத்துவதற்கென்று, நியாயப் பிரமாணத்தை நிறைவேற்றும்படி நமக்காக இயேசு கிறிஸ்துவை தேவன் அனுப்பினார். இந்த இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிக்கும்போது நமக்குள் நியாப்பிரமாணத்தின் நீதி நிறைவேறி, தேவநீதி வருகிறது, நீதிமான்கள் என்று நாம் தேவனால் தீர்ப்பிடப்படுகிறோம்.

மத்-5: 17 நியாயப் பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களை யானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக் கொள்ளாதேயுங்கள், அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

ரோம-7: 7 ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப் பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை, இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.

இயேசுவால் நிறைவேற்றி முடிக்கப்பட்ட நியாயப்பிரமாணங்கள்

  • பாவத்திற்காக மிருங்களைப் பலியிடுதல் (இயேசு ஒரே தரம் பலியாகிவிட்டார்)
  • மாம்சத்தில் விருத்தசேதனம் செய்யப்படுதல் (ஆவியில் இருதய விருத்தசேதனம்)

மற்ற ஒழுக்கநெறிப் பிரமாணங்கள் அனைத்தும் அன்பின் நிமித்தமாக, நமது நலுனுக்காக, நாம் கைக் கொள்ளவேண்டிய தேவப் பிரமாணங்களாக இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.

நியாயப்பிரமாணத்தில் 10 கற்பனைகள் நன்கு அறியப்பட்டவைகளாக இருக்கின்றன:

  1. என்னையன்றி உனக்கு வேறு தெயவங்கள் உண்டாயிருக்க வேண்டாம் (யாத்-20: 3)
  2. யாதொரு விக்கிரகத்தையோ சொரூபத்தையோ உண்டாக்கவேண்டாம் (யாத்-20: 4-6)
  3. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்கவேண்டாம் (யாத்-20: 7)
  4. ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க நினைக்கவேண்டும் (யாத்-20: 8-11)
  5. தகப்பனையும் தாயையும் கனம்பண்ண வேண்டும் (யாத்-20: 12)
  6. கொலை செய்யாதிருப்பாயாக (யாத்-20: 13)
  7. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக (யாத்-20: 14)
  8. களவு செய்யாதிருப்பாயாக (யாத்-20: 15)
  9. பிறருக்கு விரோதமாக பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக (யாத்-20: 16)
  10. பிறர் பொருளை இச்சியாதிருப்பாயாக (யாத்-20: 17)

முதல் 4 கற்பனகைள் நாம் தேவனிடத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும், அடுத்த 6 கற்பனைகள் நாம் பிறரிடத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. இந்தக் கற்பனைகள் நம்மை அடிமைகளைப்போல இயக்குவதற்காக அல்ல, மாறாக அன்பினால் நடத்திச் செல்வதற் குரியவைகள் ஆகும். தம்முடைய மக்களை எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து கொண்டுவந்த தேவன், நியாயப் பிரமாணங்களை மீண்டும் அடிமைப் படுத்துவதற்காகக் கொடுக்கவில்லை. மாறாக அன்பின் பிரமாணங்களாகக் கொடுத்திருக்கிறார்.

III. அதிகாரங்கள் 25 முதல் 40

ஆசரிப்புக்கூடாரம்:  ஆராதனை மற்றும் ஐக்கியத்தின் இடம்

துவக்கத்தில் தீமைக்கேதுவாக நடந்துகொண்டார்கள். பிறகு நல்லவிதத்தில் நடந்துகொண்டார்கள். மோசே மலைக்குச்சென்று திரும்பிவரத் தாமதித்தபோது, மக்கள் ஆரோனைத் தூண்டிவிட்டு கன்றுக்குட்டியாகிய விக்கிரகத்தை உண்டாக்கி தவறுசெய்தலுக்குள் சென்றார்கள். மனந்திரும்ப மறுத்த, எதிர்த்து செயல்பட்டவர்கள் அகற்றப்பட்டு, மக்கள் மத்தியில் சுத்திகரிப்பு உண்டானது. ஆசரிப்புக்கூடாரம் கட்டப்படும் செயலில் அனைவரும் ஒருமனதோடும் உற்சாகத்தோடும் பங்கெடுத்தார்கள்.

தேவனுடைய இரக்கமும் அன்பும்:

‥குழந்தையாக மோசே கொல்லப்படாமல் காக்கப்பட்டு, அரண்மனையில் வைத்து பராமரிக்கப்பட்டது

‥இஸ்ரவேல் ஜனத்தை எகிப்தியரின் கொடுமையிலிருந்தும் அடிமைத் தனத்திலிருந்தும் விடுவித்து வெளியே கொண்டுவந்தது.

‥செங்கடலைப் பிளந்து, வழியை உருவாக்கி, பின்தொடர்ந்த சத்துருக்களை அதே செங்கடலுக்குள் மூழ்கடித்தது.

‥வனாந்தரத்தில், 40 வருடங்கள் மன்னாவைக் கொடுத்துப் போஷித்தது.

‥கன்மலையைப் பிளந்து தண்ணீர் கொடுத்தது.

‥கசந்த தண்ணீரை மதுரமான தண்ணீராக மாற்றியது.

‥வெண்கல சர்ப்பத்தை நாட்டிவைத்து, அதைப் பார்ப்பவர்கள் பிழைக்கும்படி செய்தது.

யாத்திராகமத்தில் இயேசு

† இயேசுவுக்கு நிழலாட்டமாக மோசே- அவருடைய மீட்கும் செயல்

† மோசேயின் தாழ்மை, உண்மை, சாந்தகுணம்-இயேசுவின் தாழ்மை, உண்மை

† பஸ்கா ஆட்டுக்குட்டி- நமக்காகப் பலியான தேவ ஆட்டுக் குட்டியானவர் இயேசு.

† வெண்கல சர்ப்பம் உயர்த்தப்பட்டது- இயேசு நமக்காக சாபத்தின் சின்னமானார்.

† ஆசாரிப்புக் கூடாரத்தின் ஒவ்வொரு பாகமும் உபகரணங்களும் இயேசுவைப் பிரதிபலிக்கின்றன.