உன்னதப்பாட்டு

உன்னதப்பாட்டு - "காதல் மற்றும் திருமணத்தின் அழகைப் பாடும் கவிதைகள்"

 

முகவுரை:

உன்னதப்பாட்டு என்பதற்கு ஆங்கிலத்தில் Song of Songs அதாவது பாடல்களின் பாடல் என்றும், சாலோமோனின் பாடல்கள் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. உன்-1: 1 சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு. தமிழில் மேலானபாட்டு என்று அர்த்தம் கொடுக்கும்விதத்தில் இது பெயரிடப்பட்டுள்ளது. அதாவது சாலோமோன் சுமார் 1005 பாடல்களை எழுதியிருந்ததால், அவைகளில் இந்தப் பாட்டையே மிகச்சிறந்த பாடலாக அவர் பார்த்திருக்கிறார். (1ராஜா-4: 32 அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான், அவனுடைய பாட்டுக்கள் ஆயிரத்து ஐந்து). விளக்கம் கொடுத்தலில் பல்வேறுபட்ட விவாதங்களைக் கடந்துசெல்கிற புத்தகமாக இது இருக்கிறது. 12ஆம் நூற்றாண்டின் ஆலென் எஸ்றா என்ற ஒரு யூதவேதபண்டிதர் இது ஆபிராகமிலிருந்து மேசியாவரைக்கும் யூதர்களின் சரித்திரத்தைப் பிரதிபலிக்கிறது என்று சொல்கிறார். மற்றவர்கள் மணவாட்டி என்பது ஞானத்தை உருவகப்படுத்துகிறது என்று கருதுகிறார்கள். இந்தப் புத்தகம் 2 தன்மைகளில் வியாக்கியானம் செய்யப்படலாம். ஒன்று இருப்பதை அப்படியே விளக்கமளித்தல். மற்றொன்று, உருவகமாகப் பார்த்து விளக்கமளித்தல்.

இந்தப் புத்தகத்தைக்குறித்த 4 கோணங்களை நாம் பார்க்கலாம்:
  1. ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான காதல் காவியம்:

இன்றைய உலகில் அதிகமாகப் பார்க்கப்படுகிற, வாசிக்கப்படுகிற சினிமாக்கள், புத்தகங்கள் காதல் கதைகளை உள் அடக்கியிருக்கின்றன. பல மனிதர்கள் தங்களுடைய நேரத்தில் 80 விழுக்காடு காதல் சம்பந்தப்பட்டவற்றை சிந்திப்பதில் செலவு அழிக்கிறார்களாம். கணவனுக்கும் மனைவிக்குமிடையே காதல் நட்பும், காதல் ஈர்ப்பும், நேசமும் இருப்பது தேவன் படைத்த ஒரு அமைப்பு. அது தவறு அல்ல என்பதை இந்தப் புத்தகத்தின் மூலமாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது. பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்காக மாத்திரமல்ல தாம்பத்திய உறவு, கணவன் மனைவியிடையே சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்குமுரிய பரிசுத்த செயலாக இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்வோமாக! தாம்பத்திய உறவை கட்டாயப்படுத்திப் பெறவும் கூடாது, கட்டாயப்படுத்தி தடுக்கவும்கூடாது. ஒருவர்ஒருவர் மற்றவரை விரும்ப வைக்கவேண்டும்.

  1. நல்ல திருமணவாழ்வை அமைப்பதற்குரிய ஒரு படிப்பித்தலின் புத்தகமாக இது இருக்கிறது:

திருமணமாகாதவர்கள் தங்கள் திருமணத்திற்குப் பிறகு, தங்கள் திருமணவாழ்வை எப்படி நடத்திச் செல்லவேண்டும், ஒரு கணவனாக ஆணின் செயல்பாடுகள், ஒரு மனைவியாகப் பெண்ணின் செயல்பாடுகள் போன்றவற்றைக் குறித்து இருபாலருக்கும் வேதாகம முறைப்படி, பரிசுத்தமான பார்வையில் கற்றுக்கொடுத்தல் அவசியமானதாக இருக்கிறது. அப்டிச்செய்வதில், முதிர்வயதுள்ள ஆண்கள் வாலிபப் பையன்களுக்கும், முதிர்வயதுள்ள பெண்கள் வாலிபப் பெண் பிள்ளைகளுக்கும் போதிக்கவேண்டிய பொறுப்பில் இருக்கிறார்கள். முறையானதை நாம் முறைப்படி கற்றுக்கொடுக்கத் தவறினால், பாலியலைக்குறித்தும், தாம்பத்திய உறவைக்குறித்தும் இளம் தலைமுறையினர் முறையற்றவிதத்தில் கற்றுக்கொண்டு பாவத்தில் விழுவதற்கும், இடறுவதற்கும் காரணமாக மாறும். வேதாகமம் அதை மறைக்கப்பட்ட போதனையாக வைக்கவில்லை, தேவன் இதைக்குறித்து வெளிப்படையாக எழுதி வைத்திருப்பாரானால், அதை நாம் தவறானதாகவோ, முறைகேடானதாகவோ ஆக்கக்கூடாது. திருமண வாழ்வில் கருத்து முரண்பாடுகள் வரும், உன்-2: 15 திராட்சத் தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள், நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே. மணவாட்டி (கோபத்தில்) தன் நேசரைப் போகும் அனுப்பிவிடுகிறாள். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் வரும்போது பிரிந்துபோவதை அல்ல, அமர்ந்து பேசி சரிசெய்வதையே தேவன் விரும்புகிறார். உன்-2: 17 என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்து போகும்வரைக்கும், நீர் திரும்பி (turn). குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

  1. தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையேயான உறவின் அடையாளமாகவும் இது இருக்கிறது:

ஏசா-54: 5 உன் சிருஷ்டிகரே உன் நாயகர் சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தா; உன் மீட்பர் அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.

எரே-31: 32 நான் அவர்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல, ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப் போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

  1. கிறிஸ்துவுக்கும் சபைக்குமிடையேயான உறவின் அடையாளமாகவும் இது இருக்கிறது:

கிறிஸ்து சபையை எவ்வாறு தனது சொந்த மணவாட்டியாகப் பார்த்து, அதை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதையும், சபை கிறிஸ்துவின் அழகை இரசித்து, எவ்வாறு அவருக்குரிய நேசத்தால் சோகமடைதலுக்குள் செல்லவேண்டும் என்பதையும் இது படம்பிடித்துக் காட்டுகிறது.

உன்-4: 7 என் பிரியமே! நீ பூரண ரூபவதி, உன்னில் பழுதொன்றுமில்லை.

உன்-5: 10-16 என் நேசா; வெண்மையும் சிவப்புமானவர், பதினாயிரம்பேர்களில் சிறந்தவர். 11. அவர் தலை தங்க மயமாயிருக்கிறது, அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாய் இருக்கிறது. 12. அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப் பட்டவைகளுமாய் இருக்கிறது. 13. அவர் கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப் போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப் போலவுமிருக்கிறது, அவர் உதடுகள் லீலி புஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது. 14. அவர் கரங்கள் படிகப்பச்சைபதித்த பொன் வளையல்களைப் போலிருக்கிறது, அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப் போலிருக்கிறது. 15. அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப் போலிருக்கிறது, அவர் ரூபம் லீபனோனைப் போலவும் கேதுருக்களைப் போலவும் சிறப்பாயிருக்கிறது. 16. அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது, அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர் எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.

இதில் வரும் நபர்கள்:

மணவாளன் - சாலோமோன் (உன்-1: 5, 3: 7, 9 11, 8: 11-12)

மணவாட்டி - சூலமித்தியாள்: உன்-6: 13 திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே!

எருசலேமின் குமாரத்திகள்: உன்-2: 7 எருசலேமின் குமாரத்திகளே!

மணவாட்டியின் சகோதரர்கள்: உன்-1: 6 நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள், வெய்யில் என்மேற்பட்டது, என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத் தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள், என் சொந்தத் திராட்சத் தோட்டத்தையோ நான் காக்கவில்லை.

ராஜாவாகிய சாலோமோனுக்குத் திருமணமான அவனுடைய இளமையின் நாட்களில் இது எழுதப்பட்டிருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் உன்-6: 8ல் ராஜாஸ்திரிகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு, கன்னியருக்குத் தொகையில்லை என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். எனவே, அவன் ராஜாவாக இருந்த மையஆண்டுகளில் (60 மனைவிகள், 80 மறுமனையாட்டிகள்) இது எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம். காரணம், அவனுடைய முடிவு நாட்களில் அவனுக்கு 700 மனைவிகளும் 300 மறுமனையாட்டிகளும் இருந்திருக்கார்கள் என்று வேதம் சொல்கிறது. இது உருவகநடையில் எழுதப்பட்டிருக்கிற பாடலாகும். இந்தப் புத்தகத்திலும் தேவன் என்ற வார்த்தை வரவில்லை. அன்பையும், நேசத்தையும் முக்கியப்படுத்துகிறது ஒரு புத்தகமாக இது இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் அன்பைக்குறிக்கிற அகவ் ahav என்ற எபிரேய வார்த்தை 18 முறை வந்திருக்கிறது (அகாபே agape என்ற கிரேக்க வார்த்தைக்கு ஒத்தாகும்). டோடெம் dodem என்ற எபிரேய வார்த்தையும் 36 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மகிழ்வுடன் அல்லது பாசத்துடன் இணைந்த அன்பு என்று இதற்கு அர்த்தமாகும். இந்தப் புத்தகத்தில் மணவாளனும் மணவாட்டியும் சரீரத்தின் அங்கங்களை வர்ணிக்கும் வார்த்தைகள், ஆவிக்குரிய அர்த்தம் கொடுக்கும்படியாக அல்ல, மாறாக கணவன் மனைவிக்கிடையே உள்ள நெருக்கமான, வெளிப்படையான உறவைக் குறிப்பதற்காக உள்ளது.

உன்னதப்பாட்டின் தொகுப்பு:

(மொத்தம் 8 அதிகாரங்கள் உள்ளன)

  1. அதிகாரம் 1: 1 ஆசிரியர் சாலோமோன்
  2. அதிகாரம் 1: 2 முதல் 2: 7 வரை: மணவாளன் மணவாட்டியைக் கொண்டுவருதல்

உன்-1: 4 என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம், ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக் கொண்டுவந்தார், நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம், திராட்சரசத்தைப் பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம், உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.

உன்-2: 4 என்னை விருந்துசாலைக்கு அழைத்துக் கொண்டுபோனார், என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே.

III. அதிகாரங்கள் 2: 8 முதல் 3: 5 வரை: மணவாட்டி மணவாளனைக் கொண்டுவருதல்:

உன்-3: 4 நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன், அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.

  1. அதிகாரங்கள் 3: 6 முதல் 5: 1 வரை: மணவாளன் வருதல்:
  2. ராஜமணவாளனாக சாலோமோன் வருகிறார் (3: 6-11). ராஜாதி ராஜாவாகிய நம் நேசர் இயேசுவும் மணவாளனாக ஒருநாள் நம்மையெல்லாம் தமது மணவாட்டியாகச் சேர்த்துக் கொள்ளுறுமாறு வரவிருக்கிறார்.
  3. மணவாட்டிக்கான தனது ஏக்கத்தை மணவாளன் விவரிக்கிறார் (4: 1-15)
  4. மணவாட்டி அவரை வரவேற்கிறாள் (4: 16). வெளி-22: 17 ஆவியும் மணவாட்டியும் வாரும் என்கிறார்கள்!
  5. மணவாளன் வருகிறார் (5: 1 என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன்)
  6. அதிகாரம் 5: 2 முதல் 8: 4 வரை: ஒருவர்ஒருவருக்காக ஏங்கியிருத்தல்:
  7. மணவாளன் அழைத்தபோது மணவாட்டி பதிலளிக்கத் தவறுகிறாள். அதன் பிறகு அவள் அவரைத் தேடுகிறாள் (5: 2-8)
  8. தன் நேசரைக் குறித்த வர்ணனை: (5: 9 முதல் 6: 3)
  9. மணவாளன் தனது அன்பை தன் மணவாட்டிமீது ஊற்றுகிறார் (6: 4 முதல் 7: 9)
  10. மணவாட்டி மணவாளனை வரவேற்கிறாள் (7: 10 முதல் 8: 4) 7: 11 வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.
  11. அதிகாரம் 8: 5-14: அன்பின் பெலன்
  12. அன்பைக்குறித்து மணவாட்டியின் வார்த்தைகள் (8: 5-10)

உன்-8: 5- 7 கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன், அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள், அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள். 6. நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப் போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப் போலவும் வைத்துக்கொள்ளும், நேசம் மரணத்தைப்போல் வலிது, நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது, அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாய் இருக்கிறது. 7. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது, ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டை பண்ணப்படும்.

  1. மணவாட்டியின் அழைப்பு (8: 14)

உன்-8: 14 என் நேசரே! தீவிரியும் (துரிதமாய் வாரும்!), கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்!