உபாகமம் - "மோசே உடன்படிக்கையை மீண்டும் உரைத்தல்; பத்துக் கட்டளைகள்"
முகவுரை:
இந்தப் புத்தகம் மோசேயின் இறுதி வாழ்த்துரையாகும். இரண்டாம் சட்டம் என்று இதற்கு அர்த்தமாகும். (‘Deu’) என்றால் இரண்டாவது என்று அர்த்தமாகும் (Duo, Dual என்ற ஆங்கில வார்த்தைகள் உதாரணங்களாகும்). மோசே இரண்டுமுறை மலைக்கு ஏறிச்சென்று 40 நாட்கள் உபவாசத்தோடு தேவசமூகத்தில் இருந்தார். முதல்முறை தேவன் எழுதிக்கொடுத்த கற்பலகைகளின் கற்பனைகளை மோசே தன்னுடைய கோபத்தில் உடைத்துவிட்டார். எனவே தேவன் மோசேயை மீண்டும் மலைக்கு வரச்சொல்லி, இரண்டாவது முறையாக கற்பனைகளின் கற்பலகைகளைத் தொகுத்துக்கொடுத்தார். எகிப்திலிருந்து புறப்பட்ட முதல் சந்ததியார் வனாந்தரத்தில் மரித்து முடிவுக்கு வந்ததும், வனாந்தரத்தில் பிறந்து வளர்ந்த புதிய சந்ததியார் கானான் தேசத்தைச் சுதந்தரிப்பதற்குத் தயாராக இருந்தார்கள். எனவே 40 வருடங்களுக்குமுன், சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட தேவனுடைய பிரமாணங்களை இந்தப் புதிய சந்ததிக்கு இரண்டாவது முறையாக மோசே கொடுப்பதை உபாகமம் விவரிக்கிறது.
பழைய மனிதனுக்கு மாத்திரமல்ல, புதிய மனிதனுக்கும் தேவனுடைய பிரமாணங்கள் மாறாதவைகளாக இருக்கிறது என்பதை இது வெளிச்சமிடுகிறது. பழைய மனிதனுக்கு கற்பலகையில் எழுதப்பட்டது, புதியமனிதனுக்கு இருதயமாக பலகையில் எழுதப்படுகிறது. பழைய மனிதனுக்குரியது மையால் எழுதப்பட்டதாக இருக்கிறது, புதிய மனிதனுக்குரியது ஆவியால் எழுதப்பட்டதாக இருக்கிறது. எழுதப்பட்ட இடமும், எழுதப்பட்ட விதமும் வேறுபட்டதாக இருக்கிறது. 2கொரி-3: 3 அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும், கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது. பிரமாணங்கள் ஒன்றுதான். தேவப்பிரமாணங்கள் யாவருக்கும், எல்லாக் காலத்திற்கும் பொதுவானதாகவும், மாறாததாகவும் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பிரமாணங்களை நாம் எப்படிக் கைக்கொள்கிறோம் என்பதில்தான் வேறுபாடு இருக்கிறது. சிலர் (பாரம்பரிய யூதர்கள்) மாம்சத்தின்படி, தங்கள் ஆதாயத்திற்காகக் கைக்கொள்கிறார்கள். வேறுசிலரோ (இரட்சிக்கப்பட்ட ஆவிக்குரியவர்கள்) ஆவியின்படி, தேவன்மேலிருக்கும் அன்பினிமித்தம் கைக்கொள்கிறார்கள். ஒவ்வொரு சந்தததியும் தேவனுடைய வார்த்தையை அறிந்தவர்களாக இருக்கவேண்டும். நம்முடைய பிள்ளைகளுக்கும், அடுத்து வரும் சந்ததிக்கும் தேவனுடைய வார்த்தையைக் கொடுக்கவேண்டியது நம்முடைய பொறுப்பாகும். விட்டுவந்த அடிமைத்தன எகிப்தை அனுபவித்திராத சந்ததியாக இந்தப் புதிய சந்ததி இருந்தது. எனவே அவைகளைக்குறித்து விவரித்துக் சொல்லி, செல்லவிருந்த வாக்குத்தத்த கானானுக்குரிய இறுதி சவாலாகவும், புத்திமதியாகவும் உபாகமம் இருக்கிறது. இந்தப் புத்தகம் தேவனுடைய ராஜ்யத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிற நமக்கு ஒரு சிறந்த படமாக இருக்கிறது.
இந்தப் புத்தகம், தேவனுக்குக் கீழ்படிதலின் முக்கியத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகிறது. இந்தப் புத்தகத்தில் செய் அல்லது செய்யாதே என்பதைக்குறிக்கும் கற்பனைகள் ஏறக்குறைய 80 முறை கொடுக்கப்பட்டுள்ளன. உபாகமத்தில் ஏராளமான கற்பனைகள் அல்லது கட்டளைகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இது உண்மையில் இருதயத்தின் புத்தகமாக இருக்கிறது என்றே சொல்லலாம். “இருதயம்” என்ற வார்த்தை 50 முறை இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருதயம் என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் மொத்தம் 252 முறை வருகிறது, அதில் அதிகபட்சமாக உபாகமத்தில் மாத்திரமே 50 முறை வருகிறது. அதுமாத்திரமல்ல, இந்தப் புத்தகத்தில் “அன்பு” என்ற வார்த்தையும் 23 முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அன்பு என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் மொத்தம் 248 முறை வருகிறது. அதில் அதிகமாக 23 முறை இந்தப் புத்தகத்தில் வருகிறது. இருதயத்தின் அன்பை உபாகமம் முக்கியப்படுத்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. உபா-6: 5 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. உபா-11: 13 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், (உபா-7: 7-9 தேவன் தம்முடைய மக்கள்மீது அன்புகூருதலையும் இந்த வசனங்கள் வெளிப்படுத்துகின்றன).
உபாகமத்தின் தொகுப்பு
(நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்)
மொத்தம் 34 அதிகாரங்களில், முதல் 33 அதிகாரங்களை ஒரு பெரிய பிரசங்கம்போன்ற உரையாக நாம் பார்க்கலாம். 34ஆவது அதிகாரம் மோசேயினுடைய மரணத்தைக்குறித்துச் சொல்கிறது.
- மோசேயின் உரையின் பிண்ணனி (உபா 1: 1-4) :
சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொருநாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயா-விலிருந்து, 2. சூப்புக்கு எதிராகவும், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும் ஆஸரோத்துக்கும் திசாகாபுக்கும் நடுவாகவும் இருக்கிற யோர்தானுக்கு இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே வந்தபோது, மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன: 3. எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே முறிய அடித்தபின்பு, 4. நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான்.
- யூதர்களின் சரித்திரம் (உபா-1: 5 முதல் 4) :
(வனாந்தரத்தில் எவ்வாறெல்லாம் கடந்து வந்தார்கள் என்பதைக்குறித்து தொகுத்துச் சொல்கிறார்)
III. பிரமாணங்களைக் கொடுத்தல் (உபா-5 முதல் 26) :
- தேவனுடைய பிரதான கற்பனை (அதி 5-6)
உபா-6: 4-5 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. (மத்-22: 37-38 இது முதலாம் பிரதான கற்பனை என்று இயேசு சொல்கிறார்).
- தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையேயான பிரதான உறவு (அதி 7-11)
உபா-7: 6 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்த மாயிருக்கும்படி தெரிந்து கொண்டார்.
- அதி-11 கீழ்படிதலும் ஆசீர்வாதமும் சேர்ந்தே செல்கின்றன. (11: 13-15 ஆசீர்வாதங்கள், 11: 22-23 சத்துருக்கள்மீது ஜெயம்)
- பல்வேறுபட்ட கற்பனைகள் (அதி 12-26)
உபா-13: 1-3 கர்த்தர் எதற்காக நம்மைச் சோதிக்கிறார்? உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக் காரனாகிலும் எழும்பி: 2. நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், 3. அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக் காரனாகிலும் சொல்லு -கிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக, உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூறுகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார்.
- மோசேயுடைய பிரசங்க உரையின் நிறைவு (உபா-25 முதல் 32) :
⋇சாபங்களும் ஆசீர்வாதங்களும் (அதி 27-30)
⋇வருங் காலத்தக்குறித்த பார்வை (அதி-31)
⋇வருங்காலத்தைக் குறித்த பாட்டு (அதி-32)
(மோசேயின் பாட்டு என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. வெளி15: 3 அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியான வருடைய பாட்டையும் பாடி).
⋇மோசே கண்களால் மாத்திரம் கானானைப் பார்க்கும்படி அனுமதிக்கப்படுதல் (அதி 32: 48-52)
⋇இறுதி ஆசீர்வாதங்கள் (அதி-33)
உபா-33: 3 மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார், அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள், அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனை அடைவார்கள்.
எரே-33: 3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
மோசே 12 கோத்திரங்களையும்; வரவழைத்து அவர்களுக்கு தீர்க்கதரிசனமான ஆசீர்வாதங்களை வெளிப் படுத்துகிறார். உபா-33: 26 யெஷுரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை, அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின் மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். உபா-33: 26ல் யெஷூரன் என்ற வார்த்தை வருகிறது. அது யாரைக்குறிக்கிறது? இஸ்ரவேலுக்கு மற்றொரு பெயர் யெஷூரன் ஆகும். இந்த வசனத்திலே இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்தும் மோசேயின்மூலம் தேவன் முன்னறிவிக்கிறார்.
⋇தேவமனிதன் மோசேயின் மரணம் (அதி-34)
உபா-34: 7 மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான், அவன் கண் இருள் அடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
உபா-34: 2 கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.
உபாகமத்தின் சிறப்பு:
நானே கர்த்தர் என்ற நாமம் யாத்திராகமத்தில் 16 முறையும், சுமார் 45 முறை லேவியராகமத்திலும், 8 முறை எண்ணாகமத்திலும் வருகிறது. ஆனால் உபாகமத்தில் இது ஒருமுறைதான் வருகிறது. கர்த்தர் எப்படிப்பட்டவர் என்பது மற்ற புத்தகங்களில் முக்கியப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கர்த்தரோடு தொடர்புடையவிதத்தில், உபாகமத்திலே அதிகமாகவும், அடிக்கடியும் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை எதுவென்றால், உன் தேவனாகிய கர்த்தர் (சுமார் 203 முதல் 245 முறை) உங்கள் தேவனாகிய கர்த்தர் (சுமார் 37 முதல் 86 முறை), என்னுடைய தேவன் (2 முதல் 30 முறை), எங்கள் அல்லது நம்முடைய தேவன் (சுமார் 19 முதல் 74 முறை), அவர்களுடைய தேவன் (சுமார் 79 முறை) என்பவைகள் ஆகும். இது எதைக் காண்பிக்கிறது? உபாகமம் அன்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு உறவின் புத்தகமாக இருக்கிறது. தேவன் மனுக்குலத்தின் மீது அன்பாயிருப்பதையும், மனுக்குலம் தேவன்மீது அன்புகூரவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. நம்மிடத்திலே தேவன் வேறு எதை எதிர்பார்க்கிறார்!
புதிய ஏற்பாட்டில் உபாகமம், சங்கீதம் மற்றும் ஏசாயா ஆகிய 3 பழையஏற்பாட்டுப் புத்தகங்கள் அதிகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. புதியஏற்பாட்டிலுள்ள 27 புத்தகங்களின் 17 புத்தகங்களில், உபாகமத்திலிருந்து 80 முறை வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு. சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, அவனை ஜெயிப்பதற்கு இயேசு உபாகமத்திலிருந்து வசனங்களைப் பயன்படுத்தினார். மத்-4: 3-4 அப்பொழுது சோதனைக்காரன் அவாpடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
உபா-8: 3 அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.