செப்பனியா

செப்பனியா - "யெகோவாவின் நாள் பற்றிய முன்னறிவிப்பு"

1. அமைப்பு:

ஏசாயா மற்றும் மீகாவுக்கு அடுத்து, யூதாவுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்த, எழுதப்பட்ட தீர்க்கதரிசனப் புத்தகம் செப்பனியாதான். கி.மு.740 முதல் 686 வரையில் ஏசாயாவும், கி.மு.735 முதல் 700 வரையில் மீகாவும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். அதற்கடுத்து எழுதப்பட்ட தீர்க்கதரிசனப் புத்தகமாக வருவது நாகூம்தான், அது சுமார் கி.மு.654ல் நடைபெற்றது. நாகூம் நினிவேக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் உரைத்தார். கி.மு.686ல் துன்மார்க்க ராஜாவாகிய மனாசேயால் ஏசாயா தீர்க்கதரிசி கொல்லப்பட்டார், இந்த மனாசே அசீரியர்களால் சிறையாக்கப்பட்டு, மீண்டும் விடுவிக்கப்பட்டார். மனாசே கி.மு.643ல் மரித்தார். ஏசாயாவின் மரணத்திற்குப் பிறகு, யூதா வைக்குறித்த எழுதப்பட்ட தீர்க்கதரிசனம் நமக்கு இல்லை. மீண்டும் யோசியாவின் நாட்களில், சுத்திகரிப்பின் வேலையை நடைபெற்ற காலத்தில், தேவன் செப்பனியா தீர்க்கதரிசியை எழுப்பி, அதற்கு வரவிருந்த அழிவைக்குறித்து முன்னறிவித்தார். இது கி.மு.630ற்கும் 621ற்கும் இடையில் நடைபெற்றதாகும்.

செப்பனியாவின் புத்தகம் இரட்டை நிறைவேறுதலின் புத்தகமாக இருக்கிறது. ஒன்று அந்த நாட்களிலே நிறைவேறுதல், மற்றொன்று இனிமேல் வரவிருக்கும் கடைசிநாட்களில் நிறைவேறுதல் மகாஉபத்திரவத்தின் நாட்களில்). தன்னைச் சுற்றிலும் காணப்பட்ட பாவத்தைக்குறித்தும், ஆவிக்குரிய வேசித்தனத்தைக் குறித்தும் கோபமடைந்திருந்த ஒரு தீர்க்கதரிசியாக செப்பனியாவை நாம் பார்க்கிறோம். யூதா மக்கள் பாகாலையும், விக்கிரகங்களையும் ஆராதித்தது, சூரியனையும் சந்திரனையும் வணங்கியது, தங்கள் பிள்ளைகளை தீமிதிக்கச் செய்தது போன்ற குறிப்புக்களை 2 ராஜாக்கள்-23: 4 முதல் 25 வசனங்கள் கொடுக்கின்றன. இது யூதா தேசத்தில், குறிப்பாக எருசலேமில் நடைபெற்றதாகும். தேவன் மேலானவராக இருக்கவேண்டிய இடத்தில், மக்கள் தங்களுக்குரியவற்றால் ஆட்கொள்ளப் பட்டிருந்தார்கள். மேலும், யூதாவுக்கு அருகாமையிலிருந்த நாடுகளின் பாவங்கள் மற்றும் அவர்களுக்குரிய நியாயத்தீர்ப்புக்களைக் குறித்தும் செப்பனியா குறிப்பிடுகிறது.

2. செப்பனியா:

செப்பனியா என்ற பெயருக்கு தேவனால் மறைக்கப் பட்டிருத்தல், அல்லது பாதுகாக்கப் பட்டிருத்தல் என்று அர்த்தமாகும். தான் எசேக்கியா ராஜாவின் கொல்லுப்பேரன் என்ற விபரத்தை செப்பனியா கொடுக்கிறார்.

எஸ்கியா என்பது எசேக்கியா ராஜாவைக் குறிக்கிறது. தான் ஒரு ராஜவம்சத்திலிருந்து வந்தவன் என்பதை மக்கள் அறியவேண்டும் என்று அவர் உணர்ந்தார். பெருமைக்காக அல்ல, கர்த்தரால் கொடுக்கப்படும் வார்த்தையின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே! எசேக்கிய நன்கு மதிக்கப்ட்டம ராஜா என்பது எல்லாருக்கும் தெரியும். எனவே அவருடைய குடும்பத்திலிருந்து வருகிறவரால் கொண்டுவரப்படும் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. எசேக்கியாவை மக்கள் நேசித்ததால், அவருடைய பேரன் என்று சொல்லிப் பேசியபோது, மக்கள் செப்பனியாவுக்கும் செவிகொடுப்பார்கள் என்பது பொதுவானதாக இருந்தது. எசேக்கியாவின் வம்சம் என்றால், தன் நாட்களில் ராஜாவாக இருந்த யோசியாவுக்கும் செப்பனியா உறவினராக இருந்தார் என்பதையும் நாம் அறிந்துகொள்கிறோம். செப்பனியா எருசலேமிலே வாழ்ந்தார். எருசலேமைக்குறித்துக் குறிப்பிடும்போது இந்த இடம் என்ற வார்த்தை செப்பனியா பயன்படுத்தியிருப்பதை நாம் பார்க்கிறோம். எரேமியா ஊழியம்செய்த நாட்களில் செப்பனியாவும் ஊழியம்செய்தார்.

3. செய்தி:

செப்-1: 7 கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது! நியாயத்தீர்ப்பு வருவதற்குமுன்பே, தம்முடைய மக்களுக்கு அதைக்குறித்த எச்சரிப்பைக் கொடுப்பதில் நம்முடைய தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார். செப்பனியா கர்த்தருடைய நாளின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படுகிறார். வரவிருக்கும் அழிவைக்குறித்து அறிவிக்கப்பட்டாலும், நீதிமான்களுக்கு இதிலே நம்பிக்கை உள்ளடங்கியிருக்கிறது. கர்த்தருடைய நாள் என்பதைக்குறித்து ஒரு தெளிவு இருக்கவேண்டியது நமக்கு அவசியமானதாக இருக்கிறது.

1. கர்த்தருடைய நாள்:

உபத்திரவக் காலத்தில் ஆரம்பித்து 1000 வருட அரசாட்சி முடியும்வரை இருப்பது, மொத்தம் 1007 வருடங்கள். செப்பனியாவில் இந்த நாளைக்குறித்தே சொல்லப்படுகிறது.

2. நியாயத்தீர்ப்பின் நாள்: (லூக்-11: 31)

ஆயிரவருட அரசாட்சியின் முடிவில் சாத்தான் பாதாளக் குழியிலிருந்து கட்டவிழ்த்து விடப்பட்டு சில நாட்களில், பெரிய வெள்ளைசிங்காசன நியாயத்தீர்ப்பு நடைபெறும். தேவன் சகல மனிதரையும் நியாயந்தீர்ப்பார். முதலாவதாக, ஆயிரவருட அரசாட்சியின்போது வாழ்ந்து மரித்த மக்களையும், அதன்பிறகு, இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளமால் மரித்த அனைவரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

3. கிறிஸ்துவின் நாள்: (1கொரி-1: 8, 5: 5, பிலி-1: 5)

இயேசுகிறிஸ்து தம்முடைய 2ஆம் வருகையின்போது, வானத்தில் வெளிப்பட்டு, தம்மால் தெரிந்துகொள்ளப் பட்டவர்களைத் தம்மோடு சேர்த்துக்கொள்ளும் நாள்.

4. கர்த்தருடைய நாள்:

பொதுவாக வாரத்தின் முதல்நாளாகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள்.

5. கர்த்தருடைய நாள்:

வெளி-1: 10 கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன், அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன்.

இந்த வசனத்தில் கர்த்தருடைய நாள் என்பது, ரோமாபுரியின் நீரோ மன்னன், கர்த்தரைப் பின்பற்றுபவர்களைத் தண்டிப்பதற்காகவும், சிங்கம் மற்றும் கொடிய விலங்குகள் மத்தியில் கிறிஸ்தவர்களை எறிந்து, அவர்களை கர்த்தரை மறுதலிக்க வைப்பதற்காகவும் வருடத்தில் ஒரு நாளைக் குறித்திருந்தான். இந்த நாள் கர்த்தருடைய நாள் என்று அழைக்கப்பட்டது. நீரோ மன்னன் தன்னைக் கர்த்தரைப்போலக் காட்டினான். எனவே இது அவனுடைய நாள் என்ற அர்த்தத்தில் நீரோவாகிய கர்த்தருடைய நாள் என்று அழைக்கப்பட்டது. கிறிஸ்தவர்களுக்கு அது கொல்லப் படுகிற, சித்திரவதை செய்யப்படுகிற நாளாக இருந்தது.

செப்பனியாவின் தொகுப்பு:

(3 அதிகாரங்கள் 5 பகுதிகளாகப் பிரிக்கப்படலாம்)

  1. அதிகாரம்-1 கர்த்தருடைய நாளின் வந்துகொண்டிருக்கும் அழிவு:
  2. ஜனங்களும், தேசத்தில் உள்ளவைகளும் வாரிக் கொள்ளப்படுதல் (1: 2-3)
  3. அந்நிய தேவர்கள் தண்டிக்கப்படுதல் (1: 4-5)
  4. கர்த்தரைத் தேடாதவர்களுக்குரிய தண்டனை (6)
  5. கர்த்தருடைய பலியின் நாள் (1: 7-12)
  6. கர்த்தருடைய நாள் (1: 14-18)
  7. அதிகாரம்-2: 1-3 நம்பிக்கையின் செய்தி:

செப்-2: 1-3 விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின்நாள் உங்கள்மேல் வருமுன்னும், 2. நீங்கள் உங்களை உய்த்து, ஆராய்ந்து சோதியுங்கள். 3. தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள், நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள், அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின் நாளிலே மறைக்கப் படுவீர்கள்.

III. அதிகாரம்-2: 4-15 தேசங்களின்மேல் அழிவு

பெலிஸ்தியா, மோவாப், அம்மோன், எத்தியோப்பியா, அசீரியா.

  1. அதிகாரம் 3: 1-7: எருசலேமின்மேல் அழிவு
  2. எருசலேமின் பாவம் (3: 1-4,7)
  3. தேவனுடைய பாழாக்குதல் (3: 6 ஜாதிகளைச் சங்கரித்தேன், அவர்கள் துருகங்கள் பாழாயின, அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்து போகாதபடிக்குப் பாழாக்கினேன், அவர்களுடைய பட்டணங்கள் மனுஷர் இல்லாதபடிக்கும் குடியில்லாதபடிக்கும் அவாந்தரையாயின)
  4. அதிகாரம்-3: 8-20: நம்பிக்கை திரும்புதல்:

செப்-3: 9-20 அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன். 10. எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலிருந்து என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணுகிறவர்கள் ஆகிய சிதறடிக்கப் பட்டவர்களின் குமாரத்தியானவள் எனக்குக் காணிக்கை கொண்டுவருவாள். 11. எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளின் நிமித்தமும் அந்நாளிலே வெட்கப் படாதிருப்பாய், அப்பொழுது நான் உன் பெருமையைக் குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன், நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங் கொள்ளமாட்டாய். 12. உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன், அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள். 13. இஸ்ரவேலில் மீதியானவார்கள் அநியாயஞ் செய்வதில்லை, அவர்கள் பொய் பேசுவதுமில்லை, வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப் படுவதுமில்லை, அவர்கள் தங்களைப் பயப் படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக் கொள்வார்கள். 14. சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள். எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. 15. கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார். இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார். இனித் தீங்கைக் காணாதிருப்பாய். 16. அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும். 17. உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார், அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார், அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார். அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். 18. உன் சபையின் மனுஷராயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாய்க் கூட்டிக்கொள்ளுவேன். 19. இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன், நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக் கொள்ளுவேன், அவர்கள் வெட்கம் அநுபவித்த சகலதேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன். 20. அக்காலத்திலே உங்களைக் கூட்டிக் கொண்டுவருவேன், அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக் கொள்ளுவேன், உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

தேவனுடைய கோபம் பெரிய அழிவைக் கொண்டுவந்தாலும், சாந்த குணமுள்ளவர்களுக்கு அவருடைய இரக்கம் எப்போதும் இருக்கிறது என்பதை நாம் மறக்கவேண்டாம்.