பிரசங்கி
பிரசங்கி - "வீண் வீண் என்று சாலொமோன்; உலகின் மாயத்தன்மை"
முகவுரை:
பிரசங்கியின் புத்தகம் சாலோமோனால் எழுதப்பட்டது என்பதில் பல வேதபண்டிதர்களுக்குள் ஒத்த கருத்து இருக்கிறது. பிரசங்கி-1: 1ல் தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள் என்பது இது சாலோமோனைத்தான் குறிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. எழுத்து நடையைவைத்து இது சாலோமானால் எழுதப்படடிருக்க வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகிறார்கள். இது உண்மைக் கருத்துகள் நிறைந்த புத்தகமாகவும், அதேநேரத்தில் பல பிரச்சனைக்குரிய கருத்துக்களை உடைய புத்தகமாகவும் இருக்கிறது. தன்னுடைய வாழ்வின் அனுபவத்திலிருந்து பேசியதால், பல உண்மைகளை நன்கு அறிந்து, நிதானித்து எழுதியிருக்கிறார் என்று சொல்கிறோம். அதேநேரத்தில் இந்தப் புத்தகத்தின் ஆரம்ப அதிகாரங்களை சாலோமோன் எழுதியபோது, முதிர்வயதில் தன்னுடைய பின்மாற்றத்தின் நிலையிலிருந்து எழுதியதால் அவர் சொல்லியிருக்கிற பல கருத்துகள் சத்தியத்திற்கு முரண்படுகிற கூற்றுகளாகவும் இருக்கின்றன.
உதாரணம்:
பிர-3: 17 சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங் காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன். (இது உண்மையான கூற்று).
யோவா-5: 28-29 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம், ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், 29. அப்பொழுது, நன்மைசெய்தவார்கள் ஜீவனை அடையும்படி எழுந் திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவார்கள் ஆக்கினையை அடையும்படி எழுந் திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
பிர-3: 18 மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன். (இது உண்மையான கூற்று இல்லை).
ஆதி-1: 26-27 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரம் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவார்கள் என்றார். 27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
பிர-3: 19 எல்லாம் மாயையே. (இது உண்மையில்லை, காரணம் எல்லாம் மாயை என்றால், நித்தியம் என்ற ஒன்றே இல்லை என்றுதானே அர்த்தமாகிறது).
சங்-73: 23-24 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன், என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். 24. ஊம்முடைய ஆலோசனையின் படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.
எபிரேய வேதவசனங்களில் அதிகமாகச் சுட்டிக்காட்டப்படுகிற ஒரு புத்தகமாக இது இருக்கிறது, அதேநேரத்தில் இதிலே பல புதிர்களும் காணப்படுகின்றன.
கவனிக்கப்படவேண்டிய சில வசனங்கள்:
† பிர-1: 9 சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.
† பிர-3: 1 ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு
† பிர-4: 9 ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்
† பிர-8: 15 புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை.
† பிர-9: 11 அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவ செயலும் நேரிடவேண்டும்.
† பிர-10: 8 படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்.
† பிர-10: 19 பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.
பிரசங்கி புத்தகத்தின் அமைப்பு:
பிரசங்கி என்பது, எக்லேஷியா (ecclesia) என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும், அதற்கு கூடுகை, அல்லது சங்கம் என்று பொருள்படும். எனவே ஒரு கூடுகைக்குக் கொடுக்கப்பட்ட பிரசங்கமாக இருக்கிறது.
- முகவுரை: அதிகாரம்- 1: 1-11
இந்தப் பகுதியில், தன்னுடைய போதனை எதைக்குறித்து இருக்கிறது என்பதை, வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்துவதை ஆசிரியர் செய்கிறார். எல்லாம் மாயையே! தேவனுக்காகச் செய்யப்படாத, தேவனுடைய உதவியில்லாமல் செய்யப்படுகிற எல்லாமே மாயைதான்!
- மையக் கருத்து: அதிகாரங்கள் 1: 12 முதல் 12: 8
நம்மைச் சுற்றி நடக்கிற அநியாயங்களையும், புத்தியற்ற செய்கைகளையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். துன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும், தான் பின்வாங்கிய நாட்களில் தான் என்ன நினைத்தார் என்பதையும் ஆசிரியர் எழுதுகிறார்.
- முடிவுரை: அதிகாரம் 12: 9-14
நம்முடைய தனிப்பட்ட வாழ்வில் நாம் செயல் படுத்துவதற்கான முக்கிய ஆலோசனையோடு ஆசிரியர் முடிக்கிறார். அது என்னவென்றால் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தை உடையவர்களாக வாழ்தல். நியாயத்தீர்ப்பு உண்டு என்பதை நினைவில்கொண்டு வாழ்தல்.
பிர-12: 13-14 காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. 14.ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
பிர-3: 17 சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
பிர-3: 16-18 மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே, உன்னை நீ ஏன் கெடுத்துக் கொள்ளவேண்டும்? 17. மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே, உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்? 18. நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாதிருப்பதும் நலம், தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றினின்றும் காக்கப்படுவான். (இதை என்பது 17ஆவது வசனத்தையும், அதை என்பது 16ஆவது வசனத்தையும் குறிக்கிறது. மிஞ்சின துன்மார்க்கமும், பேதமையும் நம்மைத் தண்டனைக் குரியவர்களாக்கும். மிஞ்சின நீதியும், ஞானமும் நம்மைப் பெருமைக் குரியவர்களாக்கி, தண்டனைக் குரியவர்களாக்கும்)
பிர-11: 9 வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும், உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட, ஆனாலும் இவை யெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
பிர-12: 1 நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை!
பிரசங்கியின் புத்தகம் வலியுறுத்துவது:
இயேசுவின்மீது கவனத்தைவைத்து வாழாத வாழ்க்கையெல்லாம் வீணானதும், விரயமானதுமாக இருக்கிறது. தேவனில்லாமல் இன்பங்களையோ, ஐசவரியத்தையோ, அறிவையோ, ஞானத்தையோ, வசதியையோ, பெண்களையோ, புகழையோ, பாராட்டையோ, பொழுதுபோக்கையோ, அல்லது வெறுமனே புசித்து குடித்தால் போதும் என்ற தன்னிறைவையோ நாம் பின்தொடர்ந்துபொனால், இறுதியில் இவையெல்லாம் மாயைத்தான் என்ற நிலைக்குள் நாம் வந்துநிற்போம். வாழ்க்கைக்கு அர்த்தம் தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தால்தான் (இயேசு கிறிஸ்து) வருகிறது. மாயையான வாழ்விற்கு ஜீவன் உண்டாக்கும்படி, அது பரிபூரணப்படும்படி இயேசு வந்தார் (யோவா-10: 10).
பிரசங்கியின் தொகுப்பு:
- அதிகாரம் 1: 1-11 முகவுரை
எல்லாம் மாயையே, பூமிக்குக்கீழே படுகிற பிரயாங்களைக் குறித்த பார்வை
- அதிகாரங்கள் 1: 12 முதல் 12: 8 வரை: பூமிக்குக் கீழே
1.ஒருவன் செய்கிற அனைத்துமே மாயையே (1: 12-15)
2.ஞானத்தையும் மதியீனத்தையும் தேடினேன். அதுவும் மாயையே (1: 16-18)
3.இன்பத்தைத் தேடினேன், அதுவும் மாயையே (2: 1-11)
4ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு (3: 1-8)
5.கர்த்தருக்குப் பயப்படு
6.சோம்பேரியாக இருக்காமல, விழிப்பாயிரு (11: 1-8)
7.உன் சிருஷ்டிகரை நினைப்பாயாக (11: 9 முதல் 12: 7)
8.அவர் இல்லாமல் எல்லாமே மாயைதான் (12: 8)
III. அதிகாரம் 12: 9-14 இறுதி முடிவுரை
கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே எல்லா மனிதருடைய கடமையாக இருக்கிறது.
பிரசங்கியின் புத்தகம், மனமுடைந்து நொந்துபோன ஒரு மனிதனின் கதறுதலாக இருக்கிறது. வாழ்வின் அடிப்படைக் கேள்விகளுக்கான பதிலை சாலோமோன் தேடினார். இந்தக் கேள்விகள் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கின்றன.
- நான் யார்?
- நான் எங்கேயிருந்து வருகிறேன்?
- நான் எதற்காக இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்?
ராஜாக்களின் புத்தகம்: சாலோமோனைக்குறித்து மனிதனின் பார்வையாக இருக்கிறது.
நாளாகமத்தின் புத்தகம்: சாலோமோனைக்குறித்து தேவ பார்வையாக இருக்கிறது.
பிரசங்கியின் புத்தகம்: சாலோமோனைக்குறித்து சாலோமோனின் பார்வையாக இருக்கிறது.