ஒபதியா

ஒபதியா - "எதோமின் தண்டனை; தேவ நீதி"

 

1. அமைப்பு:

பழையஏற்பாட்டிலே வெறும் 21 வசனங்களுடன் உள்ள சிறிய புத்தகம் ஒபதியா ஆகும். ஒபதியா என்ற பெயருக்கு தேவனுடைய வேலைக்காரன் அல்லது தேவனை ஆராதிப்பவன் என்று அர்த்தமாகும். ஆனால் தேவனுடைய நியாயத்தீர்ப்பைக்குறித்த மிகவும் துணிச்சலான, தைரியமான அறிவித்தலாக இது இருக்கிறது.

ஒபதியா தேவனிடத்திலிருந்து பெற்ற தரிசனம் இப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்தத் தரிசனத்தை ஒபதியா பெற்றபோது அவர் எங்கே இருந்தார் என்பது நமக்குத் தெரியவில்லை. இது முழுவதும் ஏதோமியருக்கு விரோதமான தீர்க்கதரிசனமாகும். ஏதோமியர்கள் யாரென்றால், யாக்கோபின் சகோதரனாகிய ஏசாவின் வம்சமாவார்கள். ஏதோம் என்பது இன்றைய யோர்தானைக் குறிக்கிறது. ஒபதியா ஏதோமியரிடம் இந்த தரிசனச்செய்தியைக் கொடுத்திருப்பார் என்று நாம் கருதுகிறோம்.

2. ஒபதியா:

ஒபதியாவைக்குறித்து எந்தக்குறிப்பும் நமக்குக் கொடுக்கப்படவில்லை. தான் எங்கேயிருந்து வந்தேனென்று அவரும் எதுவும் குறிப்பிடவில்லை. பழைய ஏற்பாட்டிலே 13 நபர்கள் ஒபதியா என்ற பெயருடன் அழைக்கப்படுகிறார்கள். அவர்களில் இவர் எந்த ஒபதியா என்பது நமக்குத் தெரியவில்லை. ஒரு யூதபாரம்பரியம், துன்மார்க்கமாக வாழ்ந்த ஆகாப் ராஜாவின் வேலைக்காரனோடு ஒபதியாவை இணைக்கிறது. ஆதிகாலத்துக் கிறிஸ்தவ எழுத்தாளர் ஒருவர், ஆகாபின் மகன் அகாசியாவின் அலுவலர் என்றும் ஒபதியாவை அடையாளப்படுத்துகிறார்.

ஒபதியா தீர்க்கதரிசனம் உரைத்தது கி.மு 845ல் என்று ஒரு கூட்டம் வாதாடுகிறார்கள். மற்றொரு கூட்டம் கி.மு.586ல் என்று வாதாடுகிறார்கள். கி.மு. 845 என்பது உண்மையாக இருக்குமானால், ஒபதியா ஆகாப் ராஜாவின் வேலைக்காரன்தான் என்று நாம் ஒத்துக்கொள்ளலாம். அந்த நாட்களில் அவர் ஒரு இளைஞனாக இருந்திருக்கவேண்டும். இதைக்குறித்து 1 ராஜாக்கள் 18: 3-16ல் வாசித்துப் பாருங்கள்.

1ராஜா-18: 3-16 ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான், ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான். 4. யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான். 5. ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ, நாம் சகல மிருகங்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான். 6. அப்படியே தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள். 7. ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான், அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு, 8. அவன், நான்தான், நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான். 9. அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம்செய்தேன். 10. உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும், உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கிக்கொண்டான். 11. இப்போதும் நீ போய், உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே. 12. நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார், அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்தபின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே, உமது அடியானாகிய நான் சிறுவயதுமுதல் கர்த்தருக்குப் பயந்துநடக்கிறவன். 13. யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகசிகளில் நூறுபேரை ஒவ்வொரு கெபியிலே ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமாித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப் படவில்லையோ? 14. இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான். 15. அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 16. அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.

எலியா கி.மு.849ல் வந்தார். ஒபாதியாவின் புத்தகத்தை எழுதியவர் இந்த ஒபதியாதான் என்றால், எலியாவுக்கு முன்பே வந்தவராக இவர் காணப்படுகிறார். ஆனாலும், மற்றறொரு கூற்றையும் முன்வைக்க விரும்புகிறேன். இந்தத் தீர்க்கதரிசனம் கி.மு. 586ற்குப் பிறகு வந்திருப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது. காரணம் ஒபதியாவின் புத்தகத்திற்கும் எரேமியாவின் புத்தகத்திற்கும் அநேக ஒற்றுமைகள் இருப்பதைப் பார்க்கிறோம். எரேமியா கி.மு. 580களில் வாழ்ந்தவராவார்.

எரே-49: 7-22 ஏதோமைக் குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தேமானிலே இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ? 8. தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள், ஏசாவை விசாரிக்குங்காலத்தில் அவன் ஆபத்தை அவன்மேல் வரப்பண்ணுவேன். 9. திராட்சப்பழங்களை அறுக்கிறவார்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடா; வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிற மட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ? 10. நானோ ஏசாவை வெறுமையாக்கி, அவன் ஒளித்துக் கொள்ளக் கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப் படுத்திப்போடுவேன், அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள், அவன் இனி இரான். 11. திக்கற்றவர்களாய்ப் போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன், உன் விதவைகள் என்னை நம்புவார்களாக. 12. கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாயிராதவார்கள் அதில் குடித்தார்கள், நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் நிச்சயமாய்க் குடிப்பாய். 13. போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாய் இருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 14. நீங்கள் கூடிக்கொண்டு, அதற்கு விரோதமாக வந்து, யுத்தம்பண்ணுகிறதற்கு எழும்புங்கள் என்று சொல்ல, ஜாதிகளிடத்தில் ஸ்தானாதிபதியை அனுப்புகிற செய்தியைக் கர்த்தரிடத்திலே கேள்விப்பட்டேன். 15. இதோ, உன்னை ஜாதிகளுக்குள்ளே சிறியதும், மனுஷருக்குள்ளே அசட்டை பண்ணப் பட்டதுமாக்குகிறேன் என்கிறார். 16. கன்மலை வெடிப்புகளில் வாசம்பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிறவனே உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று, நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 17. அப்படியே ஏதோம் பாழாகும், அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான். 18. சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார், அங்கே ஒருவனும் குடியிருப்பதில்லை, அதில் ஒரு மனுபுத்திரனும் தங்குவதில்லை. 19. இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவதுபோல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான், அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப் பண்ணுவேன், நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்து கொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்? 20. ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள், மந்தையில் சிறயவார்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார். 21. அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும், கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும். 22. இதோ, ஒருவன் கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான், அந்நாளிலே ஏதோமுடைய பராக்கிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரியின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.

சங்-137: 7 கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும், அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

3. செய்தி:

இது முற்றிலும், இஸ்ரவேலர்களின் தகப்பனாகிய யாக்கோபின் சகோதரன், ஏசாவின் சந்ததிகளாகிய ஏதோமியருக்கு விரோதமான, அழிவைக்குறித்த தீர்க்கதரிசனம் ஆகும். கி.மு. 500களில் இது

  1. நிறைவேறுதலுக்குள் வந்தது. வடக்கு அரேபியாவிலிருந்து வந்த நாபாத்தியர்கள் ஏதோமியர்களை ஏதொமியிலிருந்து விரட்டியடித்தார்கள். ஏதோமியர்கள் தெற்கு யூதேயாவில் குடியேறி, பிறகு இதுமேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். விருத்தசேதனம் செய்யுமாறு மக்கபேயர்கள் இவர்களைப் பலவந்தப்படுத்தினார்கள். புதியஏற்பாட்டில் நாம் பார்க்கிற மகாஏரோதுவும் ஒரு இதுமேயன் (ஏதோமியன்) ஆவார்.

    ஒபதியா-1: 15 நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும், உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.

ஒபதியாவின் தொகுப்பு:

(ஒரே அதிகாரம். 4 பகுதிகளாகப் பிரிக்கலாம்)

  1. 1: 1-9 நியாத்தீர்ப்பு நீட்டப்படுதல்:
  • தேவனுக்கு விரோதமாகத் தீங்குசெய்பவர்கள் தங்களுக்கே தீங்கை வருவித்துக் கொள்வார்கள். ஏதோமியர்கள் திருடுக்கும் கொள்ளை அடித்லுக்கும் பேர்போனவர்களாக இருந்தார்கள். (1: 5 திருடராகிலும் இராத்திரியில் கொள்ளை அடிக்கிறவர்கள் ஆகிலும் உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ?)
  • தேவன் பெருமையை வெறுக்கிறார் (1: 3 உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது).
  1. 1: 10-14 நியாயத்தீர்ப்பிற்கான காரணம்

†சகோதரன் யாக்கோபுக்கு விரோதமான கொடுமை (1: 10 நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையின் நிமித்தம் வெட்கம் உன்னை மூடும், நீ முற்றிலும் சங்கரிக்கப் பட்டுப்போவாய்.) தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் விஷயத்தில் நாம் விளையாடக்கூடாது. அவர்களுக்குத் தீங்குசெய்தல் நல்லதல்ல.

† அந்நியர்கள் வந்து சகோதரனாகிய இஸ்ரவேலைத் தாக்கியபோது, ஏதோமியர் முன்சென்று அவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும், ஆனால் அவர்களோ வேடிக்கை பார்த்துக்கொண்டு சந்தோஷப்பட்டார்கள், தப்பினவர்களைக் கொள்ளை அடித்தார்கள், மீந்திருந்தவர்களைக் காட்டிக் கொடுத்தார்கள்.

1: 12-15 உன் சகோதரன் அந்நியர் வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும், யூதா புத்திரருடைய அழிவின்நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும், அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாய்ப் பேசாமலும் இருக்க வேண்டியதாய் இருந்தது. 13. என் ஜனத்தின் ஆபத்துநாளிலே நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் அனுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும், 14. அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி வழிச்சந்திகளிலே நிற்காமலும், இக்கட்டுநாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.

III. 1: 15-16 கர்த்தருடைய பழிவாங்குதல்:

1: 15-16 எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது, நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும், உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும். 16. நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம் பண்ணினபடியே எல்லா ஜாதிகளும் எப்பொழுதும் மதுபானம் பண்ணுவார்கள், அவர்கள் குடித்து விழுங்குவார்கள், இராதவர்களைப் போல் இருப்பார்கள்.

  1. 1: 17-21 இஸ்ரவேலின் உயர்த்தப்படுதல்:

1: 17-21 ஆனாலும் சீயோன் பர்வதத்திலே தப்பியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாய் இருப்பார்கள், யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். 18. யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், யோசேப்பு வம்சத்தார் அக்கினி ஜுவாலையுமாய் இருப்பார்கள், ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாய் இருப்பார்கள், அவர்கள் இவர்களைக் கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள், கர்த்தர் இதைச் சொன்னார். 19. தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார் பெலிஸ்தரின் தேசத்தையும் சுதந்தாித்துக் கொள்வார்கள், அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக் கொள்வார்கள், பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக் கொள்வார்கள். 20. சர்பாத்மட்டும் கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரராகிய இந்தச் சேனையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் தென்திசைப் பட்டணங்களைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். 21. ஏசாவின் பர்வதத்தை நியாயந் தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் பர்வதத்தில் வந்தேறுவார்கள், அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்..

† ஏதோமின் தேசம் யூதாவுக்குக் கொடுக்கப்படும் என்று தேவன் சொல்கிறார்.

ஒபதியாவின் புத்தகம் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம்:

∗ நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ, அதுவே நமக்கும் செய்யப்படும்.

ஆபகூக்-2: 8 நீ அநேகம் ஜாதிகளைக் கொள்ளையிட்ட படியினால் ஜனங்களில் மீதியான யாவரும் நீ சிந்தின மனுஷரத்தத்தின் நிமித்தமும் நீ செய்த கொடுமையின் நிமித்தமும் உன்னைக் கொள்ளை இடுவார்கள்.

எரே-50: 29 பாபிலோனுக்கு விரோதமாய்வரும்படி வில்வீரரை அழையுங்கள், வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள், ஒருவரையும் தப்பவிடாதிருங்கள், அதின் கிரியைக்குத் தக்க பலனை அதற்குச் சரிக்கட்டுங்கள், அது செய்ததின் படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள், அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்புசெய்தது.

யாக்-2: 13 ஏனென்றால் இரக்கஞ் செய்யாதவனுக்கு, இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்.

வெளி-13: 10 சிறை படுத்திக்கொண்டு போகிறவன் சிறை பட்டுப்போவான், பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப் படவேண்டும். பரிசுத்தவான் களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.

மத்-26: 52 அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு, பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்.