நீதிமொழிகள்

நீதிமொழிகள் - "ஞானமான மொழிகள்; வாழ்க்கை நெறிகள்"

முகவுரை:

தம்முடைய மக்கள் அன்றாடவாழ்வை நடத்திச்செல்வதற்குரிய தேவனுடைய விபரமான கற்பித்தல்களாக நீதிமொழிகள் இருக்கின்றன. நீதிமொழிகளின் புத்தகம் ஞானத்தின் வார்த்தைகளாக உள்ளன. "தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்" (நீதி-1: 1) என்ற வார்த்தைகளோடு இந்தப்புத்தகம் ஆரம்பிக்கிறது. நீதிமொழிகள் என்ற வார்த்தை எபிரேயத்தில் ஒத்திருத்தல், அல்லது பிரதிபலித்தல் என்று அர்த்தம் கொடுக்கிறது. கி.மு.971 முதல் 931ல் சாலோமோனுடைய நாட்களோடு இது தொடர்புடையதாக இருக்கிறது. இந்த வார்த்தைகள் எசேக்கியாவின் நாட்களாகிய கி.மு.728 முதல் 686ன் காலங்களில் எசேக்கியா ராஜாவின் மனிதர்களால் தொகுக்கப் பட்டவைகளாக இருந்தாலும், இவை சாலோமோனின் நீதிமொழிகள் என்றே அழைக்கப்படுகின்றன.

நீதி-25: 1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள். எபிரேயத்தில் இந்தப் புத்தகத்திற்கு சாலோமோனின் உவமைகள் என்று பெயரிடப்பட்டுள்ளது.

யோபு, சங்கீதங்கள், உன்னதப்பாட்டைப் போலவே, இந்தப் புத்தகமும் பாடலாக அல்லது கவிதையாக எழுதப்பட்டதாகும். இதிலே, பல இடங்களில் எழுத்துநடையில் ஒத்த ஒப்புமைகளும், எதிர்மறை வேற்றுமைகளும், அடுத்தடுத்து கட்டியெழுப்பப்படுதலும், பயன்படுத்தப் பட்டிருப்பதை நாம் பார்க்கலாம்.

உதாரணம்:

நீதி-1: 2 இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து,

நீதி-10: 1 சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப் படுத்துகிறான், மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.

நீதி-3: 6 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள், அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.

நீதி-31: 4 திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல, லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல, மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.

வாலிபனாக இருந்த மகனுக்கு தகப்பன் எழுதிய புத்தகமாக இது இருக்கிறது. துன்மார்க்கமான பெண்களைக்குறித்த எச்சரிப்புக்களை இது கொடுத்தாலும், துன்மார்க்கமுள்ள ஆண்களைக்குறித்தும் பல குறிப்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது. அதேநேரத்தில் குணசாலியான பெண்ணின் குணாதிசயங்களின் பட்டியலோடு இந்தப் புத்தகம் முடிகிறது. தகப்பன் வாலிபனாகிய தன் மகனுக்கு எழுதியதால் வேசியான, விபச்சாரிகளான பெண்களால் ஏமாந்துவிடாதவாறு எச்சரித்திருக்கிறார். இதே காரியத்தை மகளுக்கு என்ற கோணத்தில்வைத்தும் நாம் பார்த்திடவேண்டும். வாலிபப் பெண்பிள்ளைகளும் தங்களைச் சுற்றிவந்து, இச்சைக்கேதுவாக வலைவிரிக்கிற ஆண்களைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதை மறக்கவேண்டாம்.

அதிகபட்சமான நீதிமொழிகள் குடும்பஅமைப்பில் தொகுக்கப் பட்டிருக்கின்றன. அடிக்கடி வருகின்ற வார்த்தைகள் எதுவென்றால்: மகன், தகப்பன், தாய், புருஷன், ஸ்திரீ (மனைவி), பிள்ளைகள்! மகன் என்ற வார்த்தை 44 வசனங்களிலும், தகப்பன் என்ற வார்த்தை 15 வசனங்களிலும், தாய் என்ற வார்த்தை 11 வசனங்களிலும் வந்துள்ளது. தங்கள் பிள்ளைகளை வளர்க்கிற விஷத்தில் தகப்பனும் தாயும், இருவருமே பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் முக்கியப்படுத்துகிறது.

புதியஏற்பாட்டிலே நீதிமொழிகளின் புத்தகம் சுமார் 60 முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

தேவனுடைய சிட்சையைக்குறித்த வசனம்:

எபி-12: 6 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.

நீதி-3: 11-12 என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.

தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார் என்பதைக்குறித்த வசனம்:

யாக்-4: 6 தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

1பேது-5: 5 அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள், பெருமை உள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.

நீதி-3: 34 இகழ்வோரை அவர் இகழுகிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.

சத்துருவுக்கு ஆகாரம் கொடுப்பதைக்குறித்த வசனம்:

ரோம-12: 20 அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால் அவனுக்குப் போஜனங்கொடு, அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு, நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.

நீதி-25: 21-22 உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு, அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. 22. அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய், கர்த்தர் உனக்குப் பலனளிப்பார்.

நீதிமொழிகளில் பல ஆசீர்வாதங்கள் வாக்குப் பண்ணப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகள் நித்திய கண்ணோட்டத்தை உடையவைகளாகவும் இருக்கின்றன. வாக்குப் பண்ணப்பட்டுள்ள ஆசீர்வாதங்களில் பல இப்போதைய வாழ்வில் அல்ல, நித்தியத்தில் வரக்கூடியவகைளாக இருக்கிறன.

நீதிமொழிகளில் இயேசுவைக்குறித்து சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

நீதி-23: 11 அவர்களுடைய மீட்பர் வல்லவர், அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.

நீதி-30: 3-4 நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் (பிதாவைக் குறிக்கிறது) அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. 4. வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ!

நீதிமொழிகளின் தொகுப்பு:

(மொத்தம் 31 அதிகாரங்கள். 6 பகுதிகளாக இதைப் பிரிக்கலாம்)

  1. அதிகாரங்கள் 1 முதல் 9 ஞானத்தின் பலன்கள்

1 முதல் 7 வரை உள்ள 7 அதிகாரங்களில் என் மகனே என்ற வார்த்தை 12 முறையும், அடுத்து 4: 1 முதல் 7 வரையுள்ள 4 அதிகாரங்களில் பிள்ளைகளே என்பது 6 முறையும் வந்து, முதல் 7 அதிகாரங்கள் ஒரு மகன் மற்றும் பிள்ளைகளுக்குரிய புத்திமதிகளோடும், அடுத்தவருகிற 8, 9 அதிகாரங்கள் ஞானத்தைக் குறித்தும் விவரிக்கின்றன.

2 ஆம் அதிகாரம் ஞானத்தின் முத்து என்று அழைக்கப்படலாம்.

  • 2: 1-4 ஞானத்தைத் தேடுதல்
  • 2: 5-8 ஞானத்தின் பிறப்பிடம்
  • 2: 9-11 ஞானத்தின் பலன்கள்
  • 2: 12-15 தீய மனிதரிடமிருந்து விடுவிக்கப்பட ஆலோசனை
  • 2: 16-19 தீய பெண்களிடமிருந்து விடுவிக்கப்பட ஆலோசனை
  • 2: 20-22 தீயவர்களிடமிருந்து விடு விக்கப்படுதலின் பலன்கள்
  1. அதிகாரங்கள் 10 முதல் 22: 16- சாலோமோனின் நீதிமொழிகள்

†நீதிமானையும் துன் மார்க்கனையும் ஒப்பிட்டுக் காட்டுதல் (10-15)

†தேவபக்தியுள்ள வாழ்க்கை உற்சாகப் படுத்துதல் (16-22: 16)

III. அதிகாரங்கள் 22: 17 முதல் 24- ஞானியின் வார்த்தைகள்

∗வாழ்க்கைச் சூழலைக்குறித்த காரியங்கள் (22: 17 முதல் 24)

  1. அதிகாரங்கள் 25-29: சாலோமோனின் மற்ற நீதிமொழிகள்

↻மற்றவர்கள் உடனான உறவு (25-26)

↻வாழ்க்கைச் செயல்பாடுகள் (27-29)

  1. அதிகாரம்-30 ஆகூரின் வார்த்தைகள்

ஆகூர் யார் என்பதைக்குறித்து ஆதாரம் எதுவும் நமக்குக் கொடுக்கப் படவில்லை.

  1. அதிகாரம்-31 வாலிபராஜா லேமுவேலுக்கு அவனுடைய தாயின் வார்த்தைகள் (லேமுவேல் என்பது சாலோமோனின் தாய் பத்சேபாள் சாலோமோனுக்கு வைத்த செல்லப்பெயராக இருக்கும் என்று கருதப்படுகிறது)

†31: 1-9 தீமையைத் தவிர்த்து, நன்மைசெய்

†31: 10-31 நல்ல மனைவியின் குணாதிசயங்கள்

நீதிமொழிகளின் மையக்கருத்து:

"கர்த்தருக்குப் பயப்படுதல்" என்பது 14 முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. 1: 7 அறிவின் ஆரம்பம்
  2. 1: 28-29 ஜெபத்திற்கு பதிலைக் கொண்டுவரும்
  3. 2: 5 தேவனை அறியும் அறிவுக்குச் சமமானது
  4. 8: 13 தீமையை வெறுக்கவைக்கும்
  5. 9: 10 ஞானத்தின் ஆரம்பம்
  6. 10: 27 ஆயுசு நாட்களைப் பெருகப்பண்ணும்
  7. 14: 26 திடநம்பிக்கையைக் கொடுக்கும்
  8. 14: 27 ஜீவஊற்றாக இருக்கிறது.
  9. 15: 16 அதிகமான செல்வத்தைவிட நல்லது
  10. 15: 33 ஞானத்தைப் போதிக்கும்
  11. 16: 6 தீமையைவிட்டு விலகவைக்கும்
  12. 19: 23 ஜீவனுக்கு ஏதுவானது, திருப்தியாயிருப்பான், தீமை அணுகாது
  13. 22: 4 ஐசுவரியத்தையும், மகிமையையும், ஜீவனையும் கொண்டுவரும்
  14. 23: 17-18 நம்பிக்கை வீண்போகாது

கர்த்தருக்குப் பயப்படுதல் என்பது நீதிமொழிகளுக்கு அடுத்து, மற்ற புத்தகங்களில் 7 இடங்களில்தான் வருகிறது.