மல்கியா
மல்கியா - "மனந்திரும்புதல்; எலியாவின் வருகை பற்றிய எச்சரிக்கை"
1. அமைப்பு:
பழைய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகமாகிய மல்கியா பெர்சிய சாம்ராஜ்யத்தின் நாட்களில் எழுதப்பட்டதாகும். சகரியாவின் தீர்க்கதரிசனத்திற்குப் பிறகு, சுமார் 70 ஆண்டுகள் கழித்து, நெகேமியாவின் நாட்களில் மல்கியா வருகிறார். நெகேமியா பாபிலோனில் இருந்த நாட்களில், இஸ்ரவேலருக்கு மல்கியாவின் தீர்க்கதரிசனம் கொடுக்கப்பட்டது. இஸ்ரவேலரிடம் காணப்பட்ட சில பாவங்களை மல்கியா சுட்டிக்காட்டுகிறார். யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பிவந்தபிறகு, அவர்களிடம் விக்கிரகஆராதனைப் பாவம் இல்லை, ஆனால் ஆவிக்குரிய ஆர்வமின்மையும், குறைபாடுகளும் வந்திருந்தன. அவைகள் தேவனுடைய பார்வையில் பாவமாக இருந்தன. தேவன் எதைக்குறித்தும் பொருட் படுத்துவதில்லலை, தேவன் ஒன்றையும் கண்டுகொள்ளமாட்டார், நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தேவன் அவைகளைச் சுட்டிக்காண்பித்தார்.
இது எழுதப்பட்ட காலம் கி.மு.432 முதல் 425 ஆகும். நெகேமியா தன்னுடைய புத்தகத்தில் சுட்டிக்காட்டுகிற அதே பாவங்களையே மல்கியாவும் சுட்டிக்காட்டுகிறது. இருவரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு இது அடையாளமாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டின் கடைசிப் புத்தகம், குறிப்பாக தேவனுடைய ஊழியர்களாகிய ஆசாரியர்களோடு தேவன் நேரடியாகப் பேசுகிற வார்த்தைகளை அதிகமாகக் கொண்டிருக்கிறது.
2. மல்கியா:
மல்கியாவைக்குறித்த அதிகமான குறிப்புகள் நமக்குக் கொடுக்கப்படவில்லை. மல்கியா என்ற பெயருக்கு தூதுவன், அல்லது செய்தியாளன் என்று அர்த்தமாகும். தன்னுடைய நாட்களில் வாழ்ந்த ஆசாரியர்களின் நடத்தையால் மல்கியா அதிகமாக வேதனையும், சஞ்சலமுமடைந்தார். அவர்கள் மிகவும் துன்மார்க்கராக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மக்களுக்கு முன்மாதிரி காட்டி, நல்வழியில் நடத்தவேண்டிய ஆசாரியர்கள் அதைச்செய்யத் தவறியதால் மக்களும் நியாந்தீர்க்கப் படுதலுக்குள்ளானார்கள்.
3. செய்தி:
ஆசாரியர்கள் மாய்மாலக்காரர்களாக வாழ்ந்தார்கள். அது மாத்திரமல்ல, தேவனுடைய மக்களும் தீமையான செய்கைகளுக்கு உட்பட்டிருந்தார்கள். மாய்மாலம், உண்மையின்மை, கலப்புத்திருமணங்கள், விவாகரத்து, பொய்யான ஆராதனை, ஆணவம் போன்றவைகள் அவர்களுக்குள் காணப்பட்டது.
மல்-2: 11 யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது, கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக் குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம் பண்ணினார்கள்.
தேவாலயம் கட்டப்பட்டுவிட்டது என்பதால், தேவன் தங்களைவிட்டுச் செல்லமாட்டார் என்ற தவறான தைரியத்தில், தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என்று யூதர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். மதச்செயல்களும், சடங்காச்சாரங்களும் தேவனுக்கான உண்மையான பற்றுதலின் இருதயத்தை அவர்களிடமிருந்து அகற்றியிருந்தது. இந்தப் புத்தகத்தில் கேள்வியும் பதிலும் என்ற முறையை மல்கியா பயன்படுத்துகிறார்.
மல்-1: 2 நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர்? என்கிறீர்கள். கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன். இந்தவிதமான முறையை அதிகமாக இயேசுவும் பயன்படுத்தியிருக்கிறார். மல்கியாவின் புத்தகத்தில் சில ஆச்சரியமான தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன. குறிப்பாக யோவான் ஸ்நானகனைக்குறித்தும், கர்த்தருடைய வருகையைக்குறித்தும் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்திலே சில விலையேறப்பெற்ற முத்துக்களை நாம் பார்க்கிறோம்.
உதாரணத்திற்கு:
- மல்-1: 11 சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்.
- மல்-3: 1 இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான், அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார், இதோ, வருகிறார்.
- மல்-3: 6 நான் கர்த்தர் நான் மாறாதவர்.
- மல்-3: 16-17 அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவார்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார், கர்த்தருக்குப் பயந்தவர்களுக் காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக் காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. 17. என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாய் இருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- மல்-4: 5-6 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். 6. நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகள் இடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். (யோவான் ஸ்நானக ஊழியம், மனந்திரும்புதலுக்கு அழைப்புக் கொடுத்தல்).
மல்கியாவின் தொகுப்பு:
(மொத்தம் 4 அதிகாரங்கள், 5 பகுதிகளாகப் பிரிக்கலாம்)
- அதிகாரம்-1: 2-5: தேவனுடைய அன்பு.
மல்-1: 2 நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- அதிகாரம்-1: 6-14: ஆசாரியர்களின் சுயதிருப்தி.
ஆசாரியர்களின் பாவங்கள்: கர்த்தருடைய நாமத்தை அசட்டைபண்ணுதல் (1: 6), அசுத்தமான அப்பத்தைப் படைத்தல் (1: 7), ஊனமாதைப் பலியிடுதல் (1: 8) பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் (1: 13), தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்து கொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன் (1: 14).
III. அதிகாரம்-2: 1-9: ஆசாரியர்களுக்குரிய புத்திமதி.
மல்-2: 1-2 இப்போதும் ஆசாரியர்களே, இந்தக் கட்டளை உங்களுக்குரியது. 2. நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமல் இருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன், ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்ப் போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- அதிகாரம்-2: 10-16: திருமண உடன்படிக்கையில் உண்மையாயிருத்தல், உறுதியாக இருத்தல்.
மல்-2: 14-16 ஏன் என்று கேட்கிறீர்கள், கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார், உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே. 15. அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரி பூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். 16. தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
- அதிகாரம் 2: 17 முதல் 4: கர்த்தருடைய வருகை.
மல்-3: 1, 5 இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான், அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார், இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 5. நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபச்சாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதைவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக் கொள்ளுகிறவர் களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ் செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
காணிக்கைளும், தசமபாகங்களும்:
மக்கள் தசமபாகங்களையும், காணிக்கைகளையும் கொடுப்பதை விட்டுவிட்டார்கள். அது தேவனை வஞ்சிக்கிற செயலாகக் கருதப்பட்டது.
மல்-3: 7-11 நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள், என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள். 8. மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசம பாகத்திலும் காணிக்கை களிலும் தானே. 9. நீங்கள் சபிக்கப்பட்டவார்கள், ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். 10. என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசம பாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள், அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங் கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 11. பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன், அவைகள் உங்கள்
- நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்ப் போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
உபத்திரவக் காலம்:
கடைசிநாட்களைக் குறித்த முன்னறிவித்தல்களும், தீர்க்கதரிசனங்களும் நம்மை ஆயத்தப் படுத்துவதற்காகவும், நாம் பிறரை ஆயத்தப் படுத்துவதற்காகவுமே கொடுக்கப் பட்டிருக்கின்றன. நம்மைப் பய முறுத்துவதற்காகவோ, அல்லது மக்களைப் பழி வாங்குவதற்காகவோ அல்ல.
மல்-4: 1 இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும், அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள், வரப்போகிற அந்தநாள் அவர்களைச் சுட்டொாிக்கும், அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மல்-4: 2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும், அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும், நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். (அதாவது, மகாஉபத்திரவ காலத்தின்போது அவருடைய மக்களாகிய நம்மையும், இஸ்ரவேலரையும் தேவன் எவ்வாறு போஷிப்பார், பாதுகாப்பார், பயன்படுத்துவார் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன).