லேவியராகமம்

லேவியராகமம் - "சட்டங்கள், பலி முறைகள், பரிசுத்தத்தின் விதிகள்"

முகவுரை:

லேவி என்ற கோத்திரத்தை மையமாகவைத்து லேவியராகமம் எழுதப்பட்டிருக்கிறது. யாக்கோபுடைய 12 புத்திரர்களில், லேயாள் தனக்குப் பிறந்த 3ஆவது மகனுக்கு லேவி என்று பெயரிட்டாள். லேவி என்றால் சேர்ந்திருப்பார் என்று அர்த்தமாகும். லேவியின் கோத்திரத்தை ஆசாரியத்துவப் பணிக்காகவும், ஆசாரிப்புக் கூடாரத்து வேலைக்காகவும் தேவன் பிரித்தெடுத்து அவர்களைத் தன்னோடு சேர்ந்திருக்கவும், தன்னை சார்ந்நிருக்கவும் செய்தார். லேவியராகமம் குறிப்பாக ஆசாரிப்புக்கூடாரத்தில் ஆசாரியர்களுடைய வேலைகளையும், லேவியருடைய பணிவிடைகளையும் முக்கியப்படுத்துகிறது. தேவனுடைய சார்பில் மனிதரிடம் பேசுவதும், மனிதரின் சார்பில் தேவனிடம் பேசுவதும் லேவியரின் ஊழியமாகும்.

  • பலிசெலுத்துதல் மற்றும் ஆராதனை முறைகளுக்கான பிரமாணங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
  • இந்தப் புத்தகம் சர்வாங்க தகனபலியிடுதலோடு ஆரம்பித்து, மீட்போடு நிறைவடைகிறது.
  • இது பரிசுத்தத்தைக்குறித்த புத்தகமாகும். பரிசுத்தத்தோடு தொடர்புடைய “Qdsh” என்ற எபிரேய வார்த்தை 143 முறை இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் மொத்தம் 770 முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. லேவியராகமத்தில் மாத்திரம் 6 வசனத்திற்கு ஒருமுறை என்ற விகிதத்தில் 143 முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. “பரிசுத்தம்” என்ற வார்த்தை ஆங்கிலத்தில் 87 முறை வருகிறது.

முக்கிய வசனம்:

  1. லேவி-19: 2 நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.

    தேவன் பரிசுத்தராயிருக்கிறார், மனிதன் பரிசுத்தனாக இல்லை. பாவமுள்ள மனிதன் பரிசுத்தமான தேவனிடம் எப்படி வரமுடியும்? அதற்காக பாவநிவிர்த்தி முறையை ஏற்படுத்திக்கொடுத்தார்.

    • பாவநிவிர்த்தி என்பது இந்தப் புத்தகத்தின் 2ஆவது முக்கிய வார்த்தையாகும். மனிதன் தனக்கு அருகாமையில் வரவேண்டும் என்பது தேவனுடைய அழைப்பாகும். இந்த நோக்கத்திற்காகத்தான் ஆசரிப்புக்கூடாரத்தில் பலிகளையும், ஆராதனை முறைகளையும் கர்த்தர் ஸ்தாபித்தார். இரத்தம் சிந்துதலின் பலியிடுதல் இல்லாமல் யாரும் தேவனிடம் வரமுடியாது. இரத்தத்தால் மாத்திரமே பாவத்திற்கான நிவாரணம் செலுத்தப்படமுடியும். இரத்தத்தில் உயிர் இருக்கிறது. உயிருக்காக இரத்தம் தெளிக்கப்படவேண்டும்.

லேவியராகமத்தின் தொகுப்பு

  1. முதலாவது பெரிய பிரிவு: அதிகாரங்கள் 1 முதல் 10

பரிசுத்த தேவனிடத்தில் வருதல் பரிசுத்தமான தேவனுக்குமுன்பாக பாவமுள்ள மனிதன் வருதல் எப்படி!

அ. 1 முதல் 7 காணிக்கைகள் அல்லது பலிகளைக் குறித்த பிரமாணங்கள்

ஆ. 8 முதல் 10 ஆசாரியத்துவத்தைக் குறித்த பிரமாணங்கள் ஆரோனின் குமாரர் நாதாப் அபியூவின் நடத்தை-அந்நிய அக்கினியை கொண்டுவந்தது.

  1. இரண்டாவது பெரிய பிரிவு: அதிகாரங்கள் 11 முதல் 27

“பரிசுத்த தேவனோடு வாழ்தல்” பரிசுத்தமான தேவனோடு மனிதன் உறவில் ஐக்கியமாக இருத்தல் எப்படி!

அ. 11 முதல் 15 சுத்திகரிப்பைக் குறித்த பிரமாணங்கள் (இந்த 5 அதிகாரங்கள், பிறப்பு, மரணம், குஷ்டரோகம், ஆகாரம் மற்றும் மிருகங்கள் தேவனுக்கு ஏற்புடையவைகளா இல்லையா என்பதைக் குறித்துப் பேசுகின்றன.

ஆ. அதிகாரம்-16 பாவநிவிர்த்தியின் நாள்: யூத காலண்டரின் இது மிகவும் முக்கியமான நாள் ஆகும். இந்த நாளில்தான் பிரதான ஆசாரியன் வருடத்திற்கு ஒருமுறை தேசத்திற்காகப் பலிசெலுத்துவார். இரண்டு ஆடுகளில் ஒரு ஆடு பலியிடப்பட்டு, ஒரு ஆட்டைப் போக்காடாக அனுப்பிவிடுவார்கள். (இயேசு சிலுவையில் பலியானது, நம்முடைய பாவங்களைத் தம்மேல் சுமந்துகொண்டு சென்றது அனைத்தும் இதில் அடங்கயிருக்கிறது).

இ. 17 முதல் 20: பரிசுத்த வாழ்க்கைக்குரிய வழிகாட்டுதல்கள்: மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது 17: 21. தவறான உறவுகள், மாந்திரீக ஆவிகளுடன் தொடர்புகள் மற்றும் ஒழுக்கநெறிகள் விவரிக்கப்படுகின்றன.

ஈ. 21 முதல் 22: ஆசாரியர்களும் பலிகளும்: ஆசாரியர்களுக்கான பொதுவான விதிமுறைகள், பலியிடுவதற்குத் தகுதியான மிருகங்கள் எவைகள், தகுதியற்றவைகள் எவைகள் என்பதை தேவன் தெரிவிக்கிறார்.

உ. அதிகாரம் 23 முதல் 25 அனுதின ஆராதனைகள், பண்டிகைகள், விசேஷித்த வருடங்கள்: பண்டிகைகள் மற்றும் அவைகளின் வரிசையைக் குறித்த ஒரு சிறந்த தொகுப்பு லேவியராகமம் 23ஆம் அதிகாரமாகும், அதிகாரம் 25ல் 7ஆவது வருடம், நிலத்திற்கான ஓய்வு வருடம், 50ஆவது வருடம் ஜுபிலி வருடம் (விடுதலையின் வருடம்) குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

ஊ. அதிகாரம் 26 கீழ்படிதலுக்குரிய ஆசீர்வாதம், கீழ்படியாமைக்குரிய சாபம்: கீழ்படியத் தவறுதலுக்கு அதற்குரிய விளைவுகள் உண்டு. கீழ்படிதல் ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.

எ. அதிகாரம் 27 மீட்பின் பிரமாணம்: 27: 2 யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.

7 பண்டிகைகள்:

  1. பஸ்கா- Pesach (லேவி-23: 5 முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகை) இது நம்முடைய இரட்சிப்பையும் விடுதலையையும் குறிக்கிறது. ஆட்டுக்குட்டியின் இரத்தம் (இயேசுவின் இரத்தம்) விடுதலையோடு வெளியே வருவதற்குப் பயன்படுத்தப்பட்டது)
  2. புளிப்பில்லத அப்பப் பண்டிகை (லேவி-23: 6 அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப்பண்டிகையுமாய் இருக்கும், புளிப்பு என்பது வேதாகமத்தில் தீமையையும், துன்மார்க்கத்தையும் பிரதிபலிப்பதாகும். ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும். வாரத்தின் 7 நாட்களிலும் பாவமில்லாத வாழ்க்கை வாழ்ந்திட இது நம்மை நினைவூட்டுகிறது. இயேசு கிறிஸ்துவின் சரீரம் நமக்காகக் கொடுக்கப்பட்ட பாவமில்லாத அப்பமாக இருக்கிறது.
  3. முதற்பலன்களின் பண்டிகை (லேவி-23: 10, 11 உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள். ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும். மரித்தோரிலிருந்து முதற்பேராக இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை இது பிரதிபலிக்கிறது)
  4. பெந்தகோஸ்தே பண்டிகை (லேவி-23: 16 ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஜம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள். இந்த 50ஆவது நாள் மோசே தேவனுடைய கற்பனைகளைக் கொண்டுவந்த இஸ்ரவேல் தேசத்தின் பிறந்தநாளாகும். இந்த நாளில்தான் ஆவியானவரின் ஊற்றப்படுதல் நடைபெற்றது. இது சபையின் பிறந்தநாளாக, சபை ஆவியானவரால் பெலப்படுத்தப்பட்டு நடத்திச்ச ெல்லப்படுதலை வெளிப்படுத்துகிறது,

(முதல் நான்கு பண்டிகைகள் நிறைவேறிவிட்டன.)

  1. எக்காளப் பண்டிகை (லேவி-23: 24 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபைகூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக. தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட கடைசி 7 வருடங்களின் காலத்தின் இறுதிநாளில் எக்காளங்கள் ஊதப்படும்போது நடைபெறவுள்ள மத்திய ஆகாயத்தில் சபை மற்றும் பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறிக்கிறது.
  2. பாவநிவிர்த்தியின் பண்டிகை (லேவி-23: 27 அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்திசெய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்த நாளுமாயிருப்பதாக, அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள். (இயேசு கிறிஸ்துவின் 2ஆம் வருகை. இஸ்ரவேல் தேசத்தலைவர்கள் தங்கள் தவறை உணர்ந்து இயேசுவை மேசியாகவாக எருசலேமிற்குள் அழைத்துச் செல்லுவார்கள். இயேசு இஸ்ரவேலரை இரட்சிக்கும் நாள். ரோம-11: 26, 27 இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு, விலக்குவார் என்றும், நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது.
  3. கூடாரப் பண்டிகை: (லேவி-23: 34 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதி முதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப் பண்டிகையாய் இருப்பதாக. இயேசு கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சி. சகரி-14: 16 பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுது கொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.

முழுப்புத்தகமும் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது:

  1. சர்வாங்க தகனபலி: (லேவி-1) இயேசு கிறிஸ்துவின் மரணம்
  2. போஜனபலி (அதி-2) அவர் நம்மைப் போஷித்து நடத்துதல்
  3. சமாதானபலி (அதி 3) அவரோடு சமாதானம் பெற்றிருத்தல்
  4. பாவநிவாரணபலி (அதி-4 தேவனுக்கு விரோதமான பாவம்) இயேசுவின் மரணத்தால் நாம் தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டது
  5. மீறுதல் நிவாரணபலி (அதி 5 முதல் 6: 7) மனிதரோடு ஒப்புரவாகி ஐக்கியப்படுத்தப்படுவது
  6. ஆசாரியத்துவம்: இயேசு நம்முடைய விசேஷித்த பிரதானஆசாரியராக இருக்கிறார்
  7. பண்டிகைகள்: அவருடைய வாழ்வின் கிரியைகளை நமக்குத் தெரிவிக்கின்றன.

(5 பலிகளில் (காணிக்கைகள்) முதல் 3 பலிகள் தேவைப்பட்டால் செலுத்தப்படவேண்டும், அடுத்த 2 பலிகள் கட்டாயம் செலுத்தப் பட்டாகவேண்டும் என்று நியமிக்கப்பட்டிருந்தது. பாவம் மற்றும் மீறுதலுக்கான சுத்திகரிப்பு இப்பொழுதும் இயேசுவின் இரத்தத்தால், பாவஅறிக்கையின் மூலமாக சுத்திகரிக்கப்படுகிறது 1யோவா-1: 9).