யோசுவா - "இஸ்ரவேலர் கானானைக் கைப்பற்றுதல்; யோசுவாவின் தலைமை"
முகவுரை:
யோசுவாவின் புத்தகம் வெற்றி மற்றும் ஜெயத்தின் புத்தகமாக இருக்கிறது. முழுமையான கீழ்படிதலுக்குரிய ஆசீர்வாதத்தை இந்தப் புத்தகம் முக்கியப்படுத்துகிறது. இரண்டு கீழ்படியாமையின் சம்பவங்கள் மாத்திரம் இதிலே காணப்படுகிறது.
- ஆகானின் பாவம்
- கிபியோனிர்களுக் அடுத்த விஷயத்தில் யோசுவா கர்த்தரிடம் விசாரிக்காமல் முடிவெடுத்தது.
இந்தப்புத்தகத்தை இயற்கையாகப் புரிந்துகொள்ளும் அர்த்தமும் இருக்கிறது, ஆவிக்குரிய விதத்தில் புரிந்துகொள்ளும் ஆழமான அர்த்தமும் இருக்கிறது. வனாந்தரத்தில் 40 வருட அலைச்சலுக்குப் பிறகு. யோர்தானைக் கடந்து கானானுக்குள் நுழைவதற்குரிய இடத்தில் இஸ்ரவேல் மக்கள் வந்திருந்தார்கள். மோசேயின் ஊழியமும் காலமும் நிறைவடைந்துவிட்டது. தான் வாழ்ந்த காலத்திலே அடுத்த தலைவனாக யோசுவாவை மோசே உருவாக்கியிருந்தார். ‘யோசுவா’ (Yeshua) என்பது எபிரேயப் பெயராகும். இது கிரேக்கத்தில் இயேசு என்று உச்சரிக்கப்படுகிறது. யோசுவாவின் வாழ்க்கை பல கோணங்களில் இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிறது. யோசுவா தேவஜனத்தை கானானுக்குள் கொண்டுசென்றார். இயேசு தம்முடைய சிலுவை மரணத்தின் மூலமாக நம்மை ஆவிக்குரிய கானானுக்குள் நடத்திச் சென்றார். மீண்டும் வரும்போது நம்மைப் பரம கானானுக்குள் அதாவது வெற்றியுள்ள ஆவிக்குரிய ஜீவியத்திற்குள் நடத்திச் செல்வார். கானான் (வாக்குத்தத்த தேசம்) என்பது ஆவியில் நிறைந்த, கர்த்தரால் நடத்திச் செல்லப்பட்டு, தேவனுடைய சித்தத்தில் நடக்கிற, யுத்தத்தில் ஜெயமெடுக்கும் வாழ்வைக்குறிக்கிறது. ஆவிக்குரிய வாழ்க்கையை, செழிப்பு வாழ்க்கை என்று சொல்வதைவிட கிறிஸ்துவுக்குள்ளான திருப்தி வாழ்க்கை என்று சொல்லலாம் 2பேது-1: 4 இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
யோசுவாவின் வாழ்க்கை:
- மோசேக்கு பணிவிடைக்காரனாக இருந்தான்:
மோசேயின் தேவைகளில் உதவியாக இருந்தார். 40 வருடங்கள் கூட இருந்து உருவானார்
- பொறுமையாகக் காத்திருந்தார்:
மோசே மலைக்குச் சென்றிருந்தபோது மலையின் அடிவாரத்தில் யோசுவாவைக் காத்திருந்ததைக் கற்பனை செய்துபாருங்கள். நாமாக இருந்திருந்தால் எப்படிக் காணப் பட்டிருப்போம்? (இயேசுவின் நீடியபொறுமை) இயேசு 30 வருடங்கள் பொறுமையோடு காத்திருந்து தன் ஊழியத்தைத் துவங்கினார்.
- முற்றிலும் கீழ்படிகிற சுபாவம்:
மோசே எதைச் செய்யச் சொன்னாலும் மறுப்புத் தெரிவிக்ககோ, கேள்விகேட்டலோ இல்லாமல் அப்படியே செய்தார். (இயேசுவும் பிதாவின் சித்தத்தை முழமையாகச் செய்தார்)
- யோசுவாவின் தாழ்மை (சாந்த குணம்)
- யோசுவாவின் விசுவாசம்:
தேவனுடைய வாக்குத்தத்தங்களை முற்றிலுமாக விசுவாசித்தார். 12 வேவுக்காரர்கள் அனுப்பட்டபோது, யோசுவாவும் காலேபும் மாத்திரம் நற்செய்தி கொண்டுவந்தார்கள். தைரியம் உள்ளவர்களாகப் பேசினார்கள்.
யோசுவாவின் புத்தகம் 30 வருடகால சம்பவங்களை உள்ளடக்குகிறது. தேசத்தைச் சுதந்தரிப்பதற்கு இத்தனை ஆண்டுகள் எடுத்தது. அப்படியும் முழுமையாகப் பிடிக்கவில்லை. எனவே, மீதமுள்ள பகுதிகளை பிறகு சுதந்தரித்துக் கொள்ளுமாறு யோசுவா சீட்டுப்போட்டு பங்கிட்டுக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
யோசுவாவின் புத்தகத்தின் தொகுப்பு
(இதை 3 பகுதிகளாகப் பிரிக்கலாம்)
- அதிகாரங்கள் 1 முதல் 12: வெற்றிபெறுதல்
யோசு-1: 1-9 கட்டளைகளும் வாக்குத்தத்தங்களும்
† எழுந்து, யோர்தானைக் கடந்து, நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். (க)
† உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் (வா)
† ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை (வா)
† நான் உன்னோடு இருப்பேன், உன்னைவிட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை (வா)
† பலங்கொண்டு திடமனதாயிரு (க)
† நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய் (வா)
† மோசே உனக்குக் கற்பித்த நியாயப் பிரமாணத்தின் படியெல்லாம் செய்யக் கவனமாயிரு (க)
† புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு, அதைவிட்டு வலது-இடதுபுறம் விலகாதிருப்பாயாக (க)
† நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக (க)
† இதில் எழுதி யிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக (க)
† நான் உனக்குக் கட்டளை இடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு திகையாதே, கலங்காதே (க)
† நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்
அதிகாரம்-2 ராகாபின் இரட்சிப்பு:
வேசியாக வாழ்ந்தும், ஜீவனுள்ள தேவனைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரை விசுவாசித்து அவருடைய மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்ததால், தேவன் அவளையும் அவளுடைய குடும்பத்தையும் இரட்சிதத்தார். யோசு-6: 17 ஆனாலும் இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும், நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்த படியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவருமாத்திரம் உயிரோடிருக்கக் கடவார்கள். புறஜாதியாக இருந்தும் இயேசு கிறிஸ்து வம்சத்தில் இடம்பெற்றாள் (மத்-1: 5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்). எபி-11: 31லும் யாக்-2: 25லும் அவளுடைய விசுவாசமும், கிரியையும் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது.
யோசு-2: 1 நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவு பார்க்கும்படி அனுப்பினான்.
யோசுவா இரண்டுபேரைத்தான் வேவுக்காரர்களாக அனுப்பினான். ஏன்? எண்ணாகமத்தில் மோசே 12 பேரை அனுப்பியபோது நற்செய்தி கொண்டுவந்தவர்கள் 2 பேர்தான். எனவே 2 பேரை மாத்திரம் யோசுவா தெரிந்தெடுத்து அனுப்பிவைத்தான்.
முதல் பிரிவின் உட்பிரிவுகள்:
- அதிகாரங்கள் 1 முதல் 5 ஆயத்தமாகுதல்
- அதிகாரம் 6 எரிகோவைப் பிடித்தல்
- அதிகாரங்கள் 7-8 ஆயி பட்டணமும் ஆகானும்
- அதிகாரம் 9 கிபியோனியர்களின் தந்திரம்
- அதிகாரங்கள் 10-12 வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகள் கைப்பற்றப்படுதல்
- அதிகாரங்கள் 13-22 தேசத்தைப் பங்கிடுதல்
↻அதி-13-19 யோர்தானுக்குக் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ஒதுக்கப்படுதல்
↻ அதி 20 அடைக்கலப் பட்டணங்களை ஏற்படுத்துதல்
↻ அதி-21 லேவியரின் பட்டணங்கள்
↻ அதி-22 சகோதரருக் கிடையேயான வாக்குவாதத்தை ஒழுங்குபடுத்துதல்.
III. அதிகாரங்கள் 23-24 யோசுவாவின் இறுதி வார்த்தைகளும் மரணமும்:
யோசு-24: 15 கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள், நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
காலேபின் ஆசை:
யோசு-14- 6-13 அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள், கேனாசியனாகிய எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னெயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர். 7. தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ் பார்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது, என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன். 8. ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப் பண்ணினார்கள், நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். 9. அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக் கடவது என்று சொல்லி, ஆணையிட்டார். 10. இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார், இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று, இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். 11. மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது, யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது. 12. ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும், அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே, கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான். 13. அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.
காலேப் தனக்கு 85 வயதானபோதும், இதுவரை செய்ததுபோதும் என்று அமர்ந்துவிடல்லை. நான் மோசேயோடுகூடவே இருந்துவந்தவன், ஆகவே எனக்கு தனிப்பட்ட மேன்மையும் கனமும் வேண்டும், நான் எதுவும் செய்யாமலே எனக்கு ஆசீர்வாதம் தரவேண்டும், அல்லது வரவேண்டும் என்றும் காலேப் சொல்லவில்லை.
யோசு-21: 43-45 இந்தப் பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார், அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள். 44. கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப் பாறப்பண்ணினார், அவர்களுடைய எல்லாச் சத்துருக்களிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை, அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். 45. கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல் வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை, எல்லாம் நிறைவேறிற்று.