யோபு
யோபு - "துன்பத்தில் யோபின் விசுவாசம்; தேவ ஞானம்"
முகவுரை:
பாடுகள் மற்றும் உபத்திரவங்கள் வரும்போது,
† நாம் என்ன செய்யவேண்டும்
† நாம் என்ன செய்யக்கூடாது
† எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்
† பாடுகள் எதற்காக வருகிறது
† பாடுகள் என்ன செய்கிறது
† யாரை நோக்கிப்பார்க்க வேண்டும்
† யாருடைய வார்த்தைகளுக்குச் செவி கொடுத்திடவேண்டும்
என்பதைக்குறித்த ஞானத்தை நமக்குப் போதிப்பதற்கு யோபுவின் புத்தகத்தைத் தேவன் பயன்படுத்துகிறார். பாடுகளை அனுபவித்த நேரத்தில் யோபுவுக்கு, வாலிபவயதை அடைந்திருந்த 10 பிள்ளைகள் இருந்தார்கள் என்று வேதம் சொல்கிறது யோபு-1: 2 அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். அப்படியானால் அந்த நேரத்தில் யோபுக்கு நிச்சயமாக 50 வயதுக்குமேல் இருந்திருக்கவேண்டும். பாடுகளுக்குப் பிறகு, யோபு மேலும் 140 வருடங்கள் வாழ்ந்தார் என்று யோபு 42: 16 சொல்கிறது.
யோபு-42: 16 இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
ஆகவே, யோபு 200 வயதுக்குமேல் உயிர் வாழ்ந்திருக்கிறார். இவ்வளவு நீண்டகால உயிர்வாழ்தல், யோபுவை ஆபிரகாமின் நாட்களோடு இணைக்கிறது. இது நமக்குக் கொடுக்கும் குறிப்பு என்னவென்றால், யோபுவின் புத்தகம் தோராயமாக ஆதியாகமம் 12 முதல் 24 அதிகாரங்களுக்கு இடைப்பட்ட, ஆபிரகாமுடைய காலங்களில் சம்பவித்திருக்கவேண்டும். மேலும் மோசே 5 ஆகமங்களை எழுதுவதற்கு முன்பே யோபுவின் புத்தகம் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம். சிலர், இது நோவாவின் நாட்களில் நடந்திருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். காரணம் தேவகுமாரர் அல்லது தேவபுத்திரர் என்ற பதம் பழைய ஏற்பாட்டில் நோவாவின் நாட்களில் வருவதோடு, அடுத்து யோபுவின் புத்தகத்தில்தான் வருகிறது. பழைய ஏற்பாட்டில் தேவபுத்திரர் என்பது தேவனால் படைக்கப்பட்ட தூதர்களையே குறிக்கிறது.
ஆதி-6: 2, 4 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தர்ய முள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். 4. அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள், பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவார்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
யோபு-1: 6 ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
யோபு-2: 1 பின்னொருநாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான்.
அது மாத்திரமல்ல, யோபுவின் புத்தகத்தில், இஸ்ரவேலின் 12 கோத்திரங்களுடைய பெயர்களோ, ஆசாரியர்களோ, நியாயப்பிரமாணங்களோ இருந்ததற்கான குறிப்புகள் எதுவுமே இல்லை. தன் குடும்பத்திற்கு யோபுவே ஆசாரிய வேலையைச் செய்துவந்திருக்கிறார். யோபு-1: 4-5 அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரர்களையும் தங்களோடே போஜனம்பண்ணும்படி அழைப்பார்கள். 5. விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேபும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான், இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்து வருவான்.
யோபு புத்தகத்தின் முக்கியத் தலைப்பு: தேவன் சகலத்தையும் இயக்குகிற சர்வலோகத்தின் ராஜாவாக இருக்கிறார்.
யோபுவின் வாழ்க்கை:
யோபு-1: 1 ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான், அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாய் இருந்தான்.
ஊத்ஸ் தேசம் என்பது இஸ்ரவேல் தேசத்துக்குக் தென்கிழக்கே, ஏதோமுக்குக் கிழக்கேயும், அரேபியாவுக்கு வடக்கேயுமான தேசமாக இருக்கமுடியும். புல-4: 21 ஊத்ஸ் தேசவாசியாகிய ஏதோம் குமாரத்தியே, சந்தோஷித்துக் களிகூரு!
யோபு மிகுந்த செல்வங்களை உடைவனாக இருந்தான். ஆனால் ஒரே நாளில் அனைத்து செல்வங்களையும் இழந்தான் (1: 13-19). அதன்பிறகு தன் சுகத்தையும் இழந்தான் (2: 7).
யோபு பாடுகளின் மத்தியிலிருந்தபோது:
- யோபுவின் மனைவி:
அவருடைய மனைவி அருக்குக் கொடுத்த ஆலோசனையைப் பாருங்கள். யோபு-2: 9 அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். போராட்ட நேரங்களில் தேவனை அண்டிக்கொள்ளச் சொல்வதுததான்
தெய்வீக ஆலோசனையாக இருக்கும், தேவனைத் தூஷிக்கவும், இருப்பதைவிட சாவதே மேல் என்று சொல்வது தெய்வீகமான ஆலோசனை களாகவோ, தெய்வீகமான முடிவாகவோ இருக்கமாட்டாது.
- யோபுவின் நண்பர்கள்:
யோபு-2: 11 யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.
மூன்றாவது அதிகாரத்திலிருந்து 37ஆவது அதிகாரம் வரைக்கும் யோபுவின் நண்பர்கள் யோபுவோடு பேசின உரையாடல்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் ஆறுதல் சொல்லவந்து, யோபுவைக் குற்றவாளியைப்போல நடத்தி, மேலும் வேதனையை அதிகப்படுத்தியதுதான் மிச்சம். ஆசீர்வாதத்தை, பரிசுத்தமாக வாழ்வதற்கான பலனாகப் பார்த்தார்கள். ஆசீர்வாதமோ, சுகமோ குறைவுபட்டால் அது பாவத்தின் விளைவாகத்தான் வருகிறது என்று கருதினார்கள். பாவம்தான் பாடுகளுக்குக் காரணம் என்று பார்த்தார்கள். ஆகவே யோபுவைப் பார்த்து, உன் குற்றங்களை அறிக்கைசெய்து மனந்திரும்பு என்றே அவர்கள் சொன்னார்கள். செழிப்பு மாத்திரம்தான் தேவனிடமிருந்து வரும், செழிப்பற்ற தன்மை தேவனிடமிருந்து வருவதில்லை என்ற உபதேசம்; யோபுவின் நண்பர்களின் உரையாடலில் வெளிப்படுகிறது. அது சரியானது அல்ல.
யோபுவின் 3 நண்பர்களும் யோபுவின் தகப்பனைவிட வயதில் மூத்தவர்களாக இருந்தார்கள். (யோபு-15: 10 உம்முடைய தகப்பனைப்பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோரும், விருத்தாப்பியரும் (வயது முதிந்தோர்) எங்களுக்குள் இருக்கிறார்களே. யோபு-32: 6-7 ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர், ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன். முதியோர் பேசட்டும், வயது சென்றவார்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்).
யோபுவின் நண்பர்கள் பேசியதில் ஏராளமான சத்தியஉண்மை இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தேவனைக்குறித்த பார்வையில்தான் அவர்களுடைய கூற்றுகள் குறைவுபட்டவைகளாக இருக்கின்றன. ஆனால் யோபுவோ தேவனைக்குறித்த சரியான கூற்றை உடையவராக இருந்தார் (யோபு-42: 2 தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர், நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்).
யோபு-5: 13ல் எலிப்பாஸ் சொன்னதை, 1கொரிந்தியர் 3: 19ல் பவுல் குறிப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். யோபுவின் நண்பர்கள் சொன்னவைகள் அனைத்துமே தவறானதான இருந்திருக்குமானால் பவுல் யோபுவின் புத்தகத்திலிருந்து வசனத்தைக் கோடிட்டுக் காட்டியிருக்கமாட்டாரே!
1கொரி-3: 19 இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்று எழுதியருக்கிறது.
யோபு-5: 13 அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்.
யோபுவின் புத்தகத்தினுடைய இரண்டு கண்ணோட்டங்கள்:
முதலாவது கண்ணோட்டம்:
நமது வாழ்வில் பாடுகள் மத்தியில் இருக்கும்போது, நாம் நடந்துகொள்ளவேண்டிய, பதிலளிக்கவேண்டிய முறைகளை யோபுவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ளுதல்.
↻யோபு தேவனைத் தூஷிக்கவில்லை, மாறாக துதித்து ஆராதித்தார்
(யோபு-1: 20-21 அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து: நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன், நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன், கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்).
↻யோபு தனியே, அமைதியாக அமர்ந்திருந்தார் (யோபு-2: 8, 13) 7 நாட்கள் ஒருவார்த்தையும் பேசாமல் அமைதியாயிருத்தல். நம்மால் முடியுமா?
↻யோபு தன் துக்கத்தை ஊற்றுகிறார், புலம்புகிறார்.
↻தேவனிடத்தில் பேசவேண்டும் துடித்தார்.
↻தேவன் யாராக இருக்கிறார் என்பதை நினைவுகூர்ந்து, அவரிடம் கெஞ்சுகிறார் (12-14)
↻தன்னுடைய வருங்கால நம்பிக்கையை நினைத்துப்பார்க்கிறார் (19)
கவனம் அனைத்தும் முழுக்கமுழுக்க தேவன்மீதே வைக்கப்பட்டிருக்கிறது. தேவன்மீது வைத்திருந்த நம்பிக்கையை யோபு ஒருபோதும் கைவிடவே இல்லை. மிகுந்த துக்கத்தின் மத்தியிலும் யோபு தன் உத்தமத்தை விடவே இல்லை. கர்த்தருக்குப் பயப்படுதல்தான் ஞானம் என்பதை யோபு நன்கு அறிந்திருந்தார். (யோபு-28: 28 மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம், பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்). எத்தனையோ ஆண்டுகளுக்பிறகு சாலோமோன் சொன்ன வார்த்தையை யோபு ஏற்கெனவே அறிந்து, சொல்லியிருக்கிறார்.
நீதி-1: 7 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.
நீதி-9: 10 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தில் ஆரம்பம்.
இரண்டாவது கண்ணோட்டம்:
மற்றவர்கள் பாடுகள் மத்தியில் கடந்துசெல்லும்போது, நாம் அவர்களுக்கு ஆறுதலளிக்கிறோம், உதவுகிறோம் என்ற விதத்தில் நடந்துகொள்கிற விதங்கள். யோபுவின் நண்பர்கள், யோபுவைக் குறைவுள்ளவராகப் பார்த்து அவன் சரியாகவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தினார்கள். நாமும் யாராவது பாடுபடும்போது அதற்கான காரணத்தை ஆராய்கிறவர்களாக இருக்காமல், அவர்களுடைய பாடுகளில் பங்கெடுப்போமாக, ஆறுதல் படுத்துவோமாக!
ரோம-12: 15 சந்தோஷப் படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள், அழுகிறவர்களுடனே அழுங்கள்.
1கொரி-12: 26 ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூட பாடுபடும், ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூட சந்தோஷப்படும்.
யோபுவின் தொகுப்பு:
(மொத்தம் 42 அதிகாரங்கள் உள்ளன. 4 பகுதிகளாக நாம் பிரிக்கலாம்)
- அதிகாரங்கள் 1-2 தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையேயான சவால்:
யோபுவின் புத்தகம், தேவனுக்கும் யோபுவுக்குமிடையே நடைபெற்ற போராட்டத்தையோ அல்லது யோபுவுக்கும் சாத்தானுக்குமிடையே நடைபெறற போராட்டத்தையோ அல்ல, மாறாக யோபுவை வைத்து தேவனுக்கும் சாத்தானுக்கும் இடையே வைக்கப்பட்ட போராட்டமாக இருந்தது. யார் ஜெயித்தது என்பதை யோபுவின் புத்தகம் முடிவில் தெளிவுபடுத்துகிறது. சாத்தான் தோற்றான், தேவன் ஜெயித்தார்!
- அதிகாரங்கள் 3 முதல் 37 வரை 4 சிறுபகுதிகளாகப் பிரிக்கப்படலாம்:
அ. அதிகாரங்கள் 3 முதல் 14 (முதல் சுற்றுப் பேச்சு)
- நான் ஏன் பிறந்தேனோ என்று யோபுவின் அங்கலாய்ப்பு (3)
- எலிப்பாஸின் குற்றப்படுத்துதல் (4-5)
- தன்னிடத்தில் குற்றமில்லை என்று யோபுவின் மறுமொழி (6-7)
- பில்தாத்தின் குற்றப்படுத்துதல் (8)
- தேவனைக்குறித்து யோபுவின் புரிந்துகொள்ளுதல் (9-10)
- சோப்பாரின் குற்றப்படுத்துதல் (11)
- நான் தேவனிடம் பேசிக்கொள்கிறேன் என்று யோபுவின் பதில் (12-14)
ஆ. அதிகாரங்கள் 15 முதல் 21 (இரண்டாவது சுற்றுப் பேச்சு)
- யோபுவினிடத்தில் பாவம் உண்டு என்றும், பாடுகளுக்கு அதுதான் காரணம் என்றும் யோபுவின் 3 நண்பர்களும் திரும்பத்திரும்ப வலியுறுத்துதல்
- தன்னிடத்தல் பாவம் இல்லை, தனக்கு ஏன் இப்படி நடந்தது என்று தனக்குத் தெரியவில்லை, ஆனாலும் நான் என் மீட்பரைக் காண்பேன் என்று யோபு பதிலளித்தல்.
இ. அதிகாரங்கள் 22 முதல் 31 (மூன்றாவது சுற்றுப் பேச்சு)
- பாடுகளிலிருந்து விடுபட தேவனோடு சீர்பொருந்தவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்
- யோபு தேவனுடைய கடந்தகால ஆசீர்வாதங்களையும், தன்னுடைய நிகழ்காலப் பாடுகளையும், தனக்குரிய வருங்கால நம்பிக்கையும் ஒப்பிடுகிறர் (26-31)
ஈ. அதிகாரங்கள் 32 முதல் 37 (எலிகூவின் நியாயப்படுத்துதல்)
தேவன் ஒருரே நீதியுள்ளவர், யோபுவினிடத்தில் நீதியில்லை, ஆகவே பாவத்தை ஒத்துக்கொண்டு தேவனிடம் திரும்பு என்று எலிகூ வாதாடுகிறான்.
III. அதிகாரங்கள் 38 முதல் 41
இந்தப் பகுதியில் தேவனால் சொல்லபட்ட அறிமுக வாக்கியத்தையும், யோபுவால் சொல்லப்பட்ட தொகுப்பு வாக்கியத்தையும் நாம் பார்க்கிறோம்.
யோபு-38: 1-3 அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள், நான் உன்னைக் கேட்பேன், நீ எனக்கு உத்தரவு சொல்லு.
யோபு-40: 3 அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: இதோ நான் நீசன், நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன், என் கையினால் என் வாயைப் பொத்திக் கொள்ளுகிறேன். நான் இரண்டொருதரம் பேசினேன், இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
IV.அதிகாரம்42முடிவுரை
யோபு-42: 1-6 அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: 2. தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர், நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். 3. அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். 4. நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன், நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும். 5. என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன், இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. 6. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப் படுகிறேன் என்றான்.
யோபுவின் புத்தகம் நமக்குக் கற்பிக்கும் பாடம்:
நீதிமான்களுக்கு பாடுகள் வந்தாலும், அதற்கு ஒரு முடிவு உண்டு. அந்த முடிவு இரட்டத்தனையான ஆசீர்வாதங்களோடு இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. யாக்-5: 11 இதோ, பொறுமை யாயிருக்கிறவர்களைப் பாக்கிய வான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள், கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள், கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்க முள்ளவராயிருக்கிறாரே.