ஆகாய்
ஆகாய் - "ஆலயத்தை மீண்டும் கட்ட ஊக்குவித்தல்"
1. அமைப்பு:
யூதா பாபிலோனின் சிறையிருப்பிற்குள் செல்வதற்கு முன்பாக, யூதா தேசத்தில் கடைசியாக இருந்த தீர்க்கதரிசிகள்; ஆபகூக்கும், எரேமியாவும் ஆவார்கள். நாம் ஆகாயின் புத்தகத்திற்கு வரும்போது, இவர்களுக்கும் ஆகாய்க்கும் சுமார் 100 ஆண்டுகள் கடந்துவந்திருந்தன. சிறையிருப்பிலிருந்து திரும்பியபிறகு, எருசலேமிற்கு வந்த தீர்க்கதரிசிகளில் முதலாவதாக வந்தவர் ஆகாய் ஆவார். எரேமியா மற்றும் எசேக்கியேல் தீர்க்கதரிசிகளின் மரணத்திற்குப் பிறகு இவர் வந்தார். ஆகாயும் எருசலேமிலே ஊழியம் செய்தார்.
ஆகாய், சகரியா மற்றும் மல்கியாவின் புத்தகங்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பியபிறகு வந்த தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் ஆகும். கி.மு.536ல் பெர்சியாவின் ராஜா கோரேஸ் எருசலேமிலே தேவாலயத்தைக் கட்டுவதற்கான கட்டளையைப் பிறப்பித்தான். அதன் விளைவாக கி.மு.536ல் செருபாபேலின் தலைமையில் முதல் குழு பாபிலோனிலிருந்து எருசலேமிற்குச் சென்றது. ஆலயத்தைக் கட்டுவதற்கு யார்வேண்டுமானாலும் செல்லலாம் என்று சொல்லப்பட்டபோதும், 42,360 யூதர்கள்தான் சென்றார்கள். அவர்களோடு 7337 வேலையாட்கள் வந்தார்கள். யூதர்கள் அங்கே சென்றபோது அங்கிருந்த சமாரியர்களால் ஏராளமான எதிர்ப்புக்களைச் சந்தித்தார்கள். தேவாலயத்தைக் கட்டும்வேலை 2 ஆண்டுகள் நடைபெற்று, பிறகு சுமார் 14 ஆண்டுகள் எந்தவேலையும் செய்யப்படாமல் அப்படியே நின்றுவிட்டது (கி.மு.534). தேவாலயத்தைக் கட்டுகிற வேலையை விட்டுவிட்டு, மக்கள் தங்கள் சொந்த வீடுகளைக் கட்டுவதில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்திருந்தார்கள். இந்தச் சூழலில்தான் ஆகாயையும் சகாரியாவையும் இவர்கள் மத்தியில் அவர்களுக்கு ஊழியம்செய்யுமாறு தேவன் எழுப்பினார். தமது வேலையைச் செய்வதில் தம்முடைய மக்களை மீண்டும் ஊக்கப்படுத்துவதற்காக, தேவன் ஆகாயை எழுப்பினார்.
2. ஆகாய்:
ஆகாய் என்ற பெயருக்கு விழா என்று அர்த்தமாகும். இவர் மிகவும் இளைஞனாயிருந்த சகரியாவோடு இணைந்து ஊழியம்செய்தார். ஆகாய் செருபாபேலோடு பாபிலோனிலிருந்து திரும்பிவந்தார். யூதா பாபிலோன் சிறையிருப்பிற்குள் செல்வதற்கு முன்பே, ஆகாய் யூதா தேசத்தில் பிறந்திருக்கவேண்டும் என்ற அநேக வேதபண்டிதர்கள் கருதுகிறார்கள். சாலொமோனால் கட்டப்பட்ட முந்தைய ஆலயத்தைப் பார்த்திருந்த சிலரில் ஆகாயும் ஒருவராவார். தானியேல், எசேக்கியேல், மல்கியா மற்றும் சகரியா தீர்க்கதரிசிகளின் காலத்தோடு இவர் தொடர்புடையவராவார். எஸ்றா, நெகேமியா மற்றும் செருபாபேலை தனிப்பட்ட விதத்தில் அறிந்தவராக இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. எஸ்றாவின் புத்தகத்தில் இவரைக்குறித்து குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
(எஸ்றா-3, 4: 23-24, 6: 13-18 6: 13 அப்படியே யூதாின் மூப்பர் கட்டினார்கள், தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடி வந்தது. அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக் கட்டி முடித்தார்கள்.)
3. செய்தி:
எழுந்து வேலையைச் செய்யுங்கள் என்பதே இந்தப் புத்தகத்தின் முக்கியச் செய்தியாகும்.
ஆகாய்-1: 8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள், அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகாய் புத்தகத்தின் செய்தி எஸ்றா-4 முதல் 10 அதிகாரங்களோடு தொடர்புடையதாக இருக்கிறது.
ஆகாய் புத்தகத்தின் தொகுப்பு:
(மொத்தம் 2 அதிகாரங்கள், 4 பகுதிகளாகப் பிரிக்கலாம்)
ஒரே ஆண்டில், அதாவது முதலாம் தரியு ராஜாவின் 2ஆம் வருடமாகிய கி.மு.520ல், ஆகாய் 4 செய்திகளைக் கொடுத்தார். அவைகள் பிறகு ஒரே புத்தகமாகத் தொகுக்கப்பட்டது.
- ஆகாய்-1: 1-15 முதலாவது செய்தி: (6ஆவது மாதம் முதல் தேதி, செப்டெம்பர்-1) உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
ஆகா-1: 4 இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?
ஆகா-1: 5-7 இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள். 6. நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக் கொண்டுவருகிறீர்கள், நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை, குடித்தும் பரி பூரணமடையவில்லை, நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை, கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான். 7. உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
தீர்வு:
ஆகா-1: 8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக் கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள், அதின்போpல் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- ஆகாய்-2: 1-9 2ஆவது செய்தி: (7ஆவது மாதம் 21ஆம் தேதி, அக்டோபர்-21. கூடாரப்பண்டிகையின் 7ஆவது நாள்) பிந்தின ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும்.
ஆகா-2: 3, 9 இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீந்திருக்கிறவார்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படிக் காண்கிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாததுபோல் காண்கிறதல்லவா? 9. முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரியதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
- ஆகாய்-2: 10-19 3ஆவது செய்தி: (9ஆவது மாதம் 24ஆம் தேதி, டிசம்பர்-24) நான் உங்களை ஆசீர்வதிப்பேன்.
ஆகா-2: 11-13 பரிசுத்தம் மற்றும் அசுத்தத்தைக்குறித்த வேதநியாயத்தை விவரிக்கிறது. ஒரு பரிசுத்தமான பொருள் பரிசுத்தமில்லாததைத் தொட்டால் அது பரிசுத்தமாகாது, ஆனால் தீட்டுப்பட்ட ஒருவன் பரிசுத்தமானதைத் தொட்டால் அது தீட்டுப்படும் என்பது வேதநியாயமாகும்.
ஆகா-2: 19 (உங்கள் வேலை இன்னும் முடியவில்லை. ஆனாலும்...), நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.
- ஆகாய்-2: 20-23 4ஆவது செய்தி: (9ஆவது மாதத்தின் 24ஆம் தேதி, டிசம்பர்-24) நான் வானத்தையும் பூமியையும் அசைப்பேன்.
ஆகா-2: 21 நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி, இயேசுகிறிஸ்து மறுபடியும் பூமிக்கு வரும்போது நடைபெறவுள்ள 1000 வருட அரசாட்சியைக் குறித்து இது சொல்கிறது.
ஆகா-2: 23 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.