ஆபகூக்
ஆபகூக் - "துன்பத்தில் நம்பிக்கை; 'நீதிமான் விசுவாசத்தால் வாழ்வான்'"
1. அமைப்பு:
யூதாவின் மரணத்தருணத்தில் ஆபகூக் தீர்க்கதரிசனம் உரைத்தார். மனந்திரும்பும்படி பலமுறை பலர்மூலமாக தேவனால் அழைப்புக் கொடுக்கப் பட்டபோதும், யூதாதேசம் பிடிவாதமாக மாறுவதற்கு மறுத்துவிட்டது. ஆபகூக் ஊழியம் செய்து கொண்டிருந்த நாட்களில் பாபிலோனியர்கள் அசீரியாவை முறியடித்து ஆளுகையில் எழும்பியிருந்தார்கள். யோசியா ராஜாவின் ஆட்சிக்குப் பிறகு இந்தப் புத்தகத்தின் வார்த்தைகள் அறிவிக்கப்பட்டன. கி.மு.609ல் மெகிதோவில் நடைபெற்ற யுத்தத்தில் யோசியா கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து கி.மு.605ல் பாபிலோன் யூதா வை சிறைபிடிக்கத் தொடங்கியது. எனவே யோசியாவின் மரணத்திற்கும் பாபிலோனின் முதற்சிறைபிடிப்பிற்கும் இடையில் கி.மு. 609 முதல் 606ல் ஆபகூக்கின் புத்தகம் வருகிறது. சகரியா மற்ற எரேமியாவின் காலத்தோடு ஆபகூக் இணைக்கப்பட்டவராக இருக்கிறார். எரேமியா-22: 13 முதல் 23 வசனங்களுக்கும், ஆபகூக்-2: 5 முதல் 19 வசனங்களும் நெருங்கிய ஒற்றுமை இருப்பதைப் பார்க்கிறோம். யோசியாவின் நாட்களில் யூதா தேசத்து மக்கள் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் யோசியாவுக்குப் பின்புவந்த யோயாக்கீம் துன்மார்க்கமும் கொடூரமுமான ராஜாவாக இருந்தான்.
2ராஜா-23: 37 அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
2நாளா-36: 8 யோயாக்கீமுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனிடத்திலே கண்டு பிடிக்கப்பட்டதுமான அவனுடைய அருவருப்புகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
இதினிமித்தம் யூதாதேசம் வேகமான வீழ்ச்சிக்குள் சென்றுகொண்டிருந்தது. ஜனங்கள் மீண்டும் விக்கிரக ஆராதனைக்குள் சென்றார்கள். யூதாதேசத்தில் நடை பெற்றுக்கொண்டிருந்த வன்முறை, அக்கிரமங்கள், அபகரித்தல்கள். நியாயக்குறைவுகள், சண்டைகள், நீதிமான்களைச் சுற்றியிருந்த துன்மார்க்கம் போன்றவற்றை ஆபகூக் பார்த்தபோது அது அவரை அதிகமாக வேதனைப்படுத்தியது. தொடர்ந்து கொண்டிருக்கும் துன்மார்க்கத்தைக் குறித்த கேள்வியோடு இந்தப் புத்தகம் ஆரம்பித்து, அதிகாரம் 3ல் ஒரு அருமையான விண்ணப்பப் பாடலோடு முடிகிறது. கேள்விகேட்கும் தீர்க்கதரிசி என்றுகூட ஆபகூக்கை நாம் அழைக்கலாம். காரணம் அவர் இரண்டு கேள்விகளை முன்வைத்தார்.
- ஆபகூக்-1: 2-3 கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே! 3. நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப் பண்ணுகிறதென்ன?
- ஆபகூக்-1: 12-17 கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே நியாயத்தீர்ப்புச்செய்ய அவனை வைத்தீர், கன்மலையே, தண்டனைசெய்ய அவனை நியமித்தீர். 13. தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக் கொண்டிருக்க மாட்டீரே, பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டு இருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாய் இருக்கிறதென்ன? 14. மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறது என்ன? 15. அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக் கொள்ளுகிறான், அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் பறியிலே சேர்த்துக் கொள்ளுகிறான், அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான். 16. ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான். 17. இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக் கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோட வேண்டுமோ?
2. ஆபகூக்:
ஆபகூக் என்றால் தழுபுபவர், அல்லது தழுவுதல் என்று அர்த்தமாகும். ஆபகூக்கைக் குறித்து எந்தக் குறிப்பும் நமக்குக் கொடுக்கப்படவில்லை. இவர் லேவிகோத்திரத்திலிருந்து வந்த ஒரு ஆசாரியன் என்று யூதப்பாரம்பரியம் சொல்கிறது. தள்ளுபடி ஆகமத்தில் அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார் என்றும், தானியேல் சிங்கக்கெபியில் இருந்தபோது, தேவதூதன் இவரை யூதா விலிருந்து, பாபிலோனிலிருந்த சிங்கக்கெபிக்குள் கொண்டுசென்று, தானியேலுக்கு ஆகாரம்கொடுக்கப் பயன்படுத்தி, பிறகு மீண்டும் உடனே யூதா தேசத்தில் கொண்டுவந்துவிட்டார் என்று குறிப்பிடுகிறது (முழுமையான ஆதாரம் இல்லை). ஆபகூக் ஒரு எளிமையான விசுவாச நபராக, அதேநேரத்தில் உறுதியான விசுவாசத்தை உடையவராக இருந்தார். யூதாவில் பாபிலோனின் சிறையிருப்பு ஆரம்பித்ததற்கு முந்தைய கடைசி தீர்க்கதரிசி ஆபகூக் ஆவார்.
3. செய்தி:
ஆபகூக்கின் செய்தி யூதா வுக்குரிய எச்சரிப்பின் செய்தியாக இருக்கிறது. ஆனாலும், எச்சரிப்புக்கும் மேலாக இது பலமுக்கிய சத்தியத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. இதிலே 3 கோண செய்தியை நாம் பார்க்கலாம்.
- தேவன் யூதாவை நியாந்தீர்ப்பார் என்ற செய்தி: இதற்கு பாபிலோனை தேவன் கருவியாகப் பயன்படுத்துவார் என்று குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
- தேவன் சர்வத்தையும் ஆளுகிறார் என்ற செய்தி: தேவன் அவர் தேவனாக இருக்கிறபடியால், தாம் செய்ய நினைப்பதை தமது முறைப்படி செய்வதற்கு அவர் முழுஉரிமை பெற்றவராக இருக்கிறார்.
- விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற செய்தி: தேவனாக இருப்பது தேவனுடைய வேலை. தேவனை விசுவாசிப்பது நம்முடைய வேலை.
நாகூமைப் போலவே, தேவனுடைய பல தன்மைகளை ஆபகூக்கும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
- தேவன் எப்போதுமே உடனே பதிலளிப்பவரல்ல. தம்முடைய தீர்க்கதரிகளுக்கும்கூட (1: 2)
- சிலநேரங்களில் நம்பபப்பட முடியாதவிதத்தில் தேவன் பதலிளிக்கிறார் (1: 5 விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.)
- தேவன் பூர்வகாலமுதல் இருப்பவர் (1: 12)
- பரிசுத்தர் (1: 12)
- கன்மலை (1: 12)
- தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணன் (1: 13)
- கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் பூமி நிறைந்திருக்கும் (2: 14)
8. கர்த்தர் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார் (2: 20)
- தம்முடையவர்களை இரட்சித்துக் காப்பாற்றிட அவர் வருகிறார் (3: 13 உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்).
- கர்த்தரின் துதியினால் பூமி நிறையும் (3: 3)
- தேவன் வல்லமையானவர் (3: 4-7)
- தேவன் கோபத்தை உடையவர் (3: 8, 12)
- எப்படிப்பட்ட சூழலிலும், தேவனே நமக்குப் போதுமனவராக இருக்கிறார் (3: 17-18)
- கர்த்தர் நம் பெலனாக இருக்கிறார் (3: 19)
ஆபகூக்கின் தொகுப்பு:
(3 அதிகாரங்களை 3 பகுதிகளாகப் பிரிக்கலாம்)
- அதிகாரம்-1 ஆபகூக்கின் கேள்விகள்:
- முதல் கேள்வி (1: 2-4)
- தேவனுடைய பதில் (1: 5-11)
- இரண்டாவது கேள்வி (1: 12-17)
- அதிகாரம்-2 தேவனுடைய அறிவித்தல்கள்:
- சொல்லப் பட்டவைகள் நிச்சயமாக நிறைவேறுதலுக்குள் வரும் (2: 2-4)
- பெருமைக் காரர்களுக்கான ஐயோ! (2: 5-20)
அ. தன்னுடைய தல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ (2: 6)
ஆ. தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ! (2: 9)
இ. இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப் படுத்துகிறவனுக்கு ஐயோ! (2: 12)
ஈ. தன் தோழருக்குக் குடிக்கக் கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப் பண்ணுகிறவனுக்கு ஐயோ! (2: 15)
உ. மரத்தைப் பார்த்து விழியென்றும், ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! (2: 19)- விக்கிரகஆராதனை.
III. அதிகாரம்-3 ஆபகூக்கின் விண்ணப்பம்:
- கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று, கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும், கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும் (3: 2)
- தேவன் வருகிறார் (3: 3-5)
பாபிலோனியர்கள் எருசலேமிற்குள் வடக்கேயிருந்து வந்தார்கள். ஆனால் தேவனோ தெற்கேயிருந்து வருவார். (பூமியின்மேல் இயேசு கிறிஸ்துவின் 2ஆம் வருகை).
- தேவன் நின்று பூமியை அளக்கிறார் (3: 6-11 அவர் நின்று பூமியை அளந்தார்)
- தேவன் பூமியிலே நடந்தார் (அவருடைய பவணி. 3: 12-15 திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர்.)
- விசுவாசத்தின் ஜெயம் (3: 17-19): விசுவாசளின் ஜெயமெடுத்தல்.
ஆபகூக்-3: 17-19 அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், 18. நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். 19. ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன், அவர் என் கால்களை மான்கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.
முக்கிய வசனம்:
ஆபகூக்-2: 4 இதோ, அகங்காரியாய் இருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள்; செம்மையானதல்ல, தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.