எசேக்கியேல்

எசேக்கியேல் - "தேவ மகிமைக் காட்சிகள்; இஸ்ரவேலின் மறுசீரமைப்பு"

 

முகவுரை:

எசேக்கியேல் என்ற பெயருக்கு "தேவன் பெலப்படுத்துகிறார், அல்லது தேவனால் பெலப் படுத்தப்படுதல்" என்று அர்த்தமாகும். சிறையிருப்பில் இருந்த நாட்களில் தேவனுடைய பெலப்படுத்துதல் எசேக்கியேலுக்கும், தேவனுடைய மக்களுக்கும் மிகவும் தேவைப்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. எசேக்கியேல் எரேமியா மற்றும் தானியேலின் காலங்களில் வாழ்ந்தவராவார். எசேக்கியேலின் புத்தகத்தில் தானியேல் 3 முறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளார் (எசே-14: 14, 14: 20, 28: 2, 3 தீருவின் அதிபதியை நோக்கி, இதோ, தானியேலைப் பார்க்கிலும் நீ ஞானவான், இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல.) எரேமியாவைப்போல எசேக்கியேலும் ஆசாரிய வம்சத்தைச் சேர்ந்தவராhக இருந்தார்.

எசே-1: 3 அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.

கி.மு.597ல் சுமார் 25 வயதாக இருக்கும்போது, எசேக்கியேல் பாபிலோனுக்குச் சிறையாக்கிக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். (எசே-1: 1 முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவார்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால்), இவருக்கு திருமணம் நடைபெற்று, சிறையாகப் போயிருந்த யூதர்களுக்கு அடையாளமாக இவருடைய மனைவி மரித்துப்போனாள்.

எசே-24: 15-24 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 16. மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன், ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக. 17. அலறாமல் பெருமூச்சுவிடு, இழவு கொண்டாட வேண்டாம், உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள், உன் தாடியை மூடாமலும் துக்கங் கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார். 18. விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன், அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள், எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன். 19. அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள். 20. நான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 21. நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறேன், நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள். 22. அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள், தாடியை மூடாமலும் துக்கங் கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள். 23. உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும், நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள். 24. அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான், அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள், இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன்.

தன்னுடைய 30ஆவது வயதாகிய கி.மு.593ல் எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பித்து, கி.மு.570வரை தொடர்ந்தார். ஒரு நபர் ஆசாரிய ஊழியத்திற்கு வருவதற்குக் குறிக்கப்பட்ட வயது 30 ஆகும். எசேக்கியேலின் செய்திகள் எருசலேமின் வீழ்ச்சிவரையில் (கி.மு.586 வரை) நியாயத்தீர்ப்பைக் குறித்து இருந்தது. ஆனால் எருசலேமின் வீழ்ச்சிக்குப்பிறகு, பாபிலோனிலிருந்த சிறைப்பட்டவர்களுக்கு, கி.மு.586 முதல் கி.மு.570 வரை ஆறுதலைக்குறித்து அவர் பிரசங்கித்தார். சுமார் 20 ஆண்டுகள் எசேக்கியேல் ஊழியம் செய்திருக்கிறார்.

எசே-33: 31 ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள், ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை, அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப் போகிறது.

எசே-40: 1 நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாந்தேதியாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார், அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினாலு வருஷமாயிற்று.

எசேக்கியேலின் புத்தகம் அநேக தரிசனங்களை உள்ளடக்கியிருக்கிறது. குறிப்பாக சில பகுதிகள் தேவனோடு தொடர்புடையவைகளாக இருக்கின்றன. அதிகாரம்-1, தேவனுடைய மகிமையின் சாயலின் தோற்றத்தோடு, தேவனுக்கு நம்மை அறிமுகப்படுத்துகிறது. தேவனுடைய தரிசனத்தை எசேக்கியேல் கண்டபோது மிகவும் வித்தியாசமான தன்மையில் நடந்துகொண்டதை நாம் பார்க்கிறோம். அதிகாரம் 1ல் வருகிற தேவனுடைய மகிமையின் தரிசனம் அடிக்கடி திரும்பவும் வருவதைப் பார்க்கிறோம். தேவனுடைய மகிமையின் தரிசனத்தைத் தவிர இன்னும் பல்வேறு தரிசனங்கள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப் பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகம் தேவனைக்குறித்த தரிசனங்களையும், சாத்தானைக்குறித்த தரிசனங்களையும் (எசே-28: 12-19) கொடுக்கிறது. அழிவைக்குறித்த தரிசனங்களும், நம்பிக்கையைக்குறித்த தரிசனங்களும் இதிலே கொடுக்கபட்டுள்ளன. புதிய உடன்படிக்கையைக் குறித்தும், புதிய சமாதானத்தின் காலத்தைக்குறித்தும் இது வாக்குப்பண்ணுகிறது.

எசேக்கியேலின் புத்தகம்:

  • தானியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷத்தைப்போல கடைசிக்காலத்தைக் குறித்து பேசுகிறது (பல அடையாளங்களும் உருவகங்களும் இதிலே பயன் படுத்தப்பட்டுள்ளன)
  • யூதாவின்மீது மாத்திரமல்ல, மற்ற புறஜாதி தேசங்களுக்கு வரும் நியாயத்தீர்ப்பைக் குறித்து பேசுகிறது (அம்மோன், மோவாப், ஏதோம், பெலிஸ்தியா, தீரு, சீதோன் மற்றும் எகிப்து. இதில் எகிப்தைத்தவிர மற்ற தேசங்கள் அனைத்தும் இல்லாமலேபோகும் என்றும் சொல்லியிருக்கிறார்).

எசே-29: 14, 15 எகிப்தியரின் சிறையிருப்பைத்திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜனனதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பி வரப்பண்ணுவேன், அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள். 15. அது இனி ஜாதிகளின்மேல் தன்னை உயர்த்தாமல், மற்ற ராஜ்யங்களிலும் அற்பமானதாயிருக்கும்: அவர்கள் இனி ஜாதிகளை ஆளாதபடிக்கு அவர்களைக் குறுகிப் போகப்பண்ணுவேன்.

•இஸ்ரவேலின் வருங்கால புதுப்பிக்கப் படுதலைக் குறித்து எசேக்கியேலின் புத்தகம் பேசுகிறது:

உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கைக்குறித்த தரிசனம் (எசே-37: 1-14): 2000 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரவேல் தன் சுயதேசத்தை இழந்து, ஒரு தேசமாகவே இல்லாமல் சிதறடிக்கப்பட்டிருந்தது. எசேக்கியேலின் வார்த்தையின்படி இஸ்ரவேல் மீண்டும் ஒரு தேசமாகப் புதுப்பிக்கப்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. 4 தலைமுறைக்கு மேல் ஒரு தேசம் தன் சொந்த தேசத்தை இழந்திருக்குமானால் அது மீண்டும் ஒரு தேசமானதே கிடையாது. ஆனால் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி.1948ல் இஸ்ரவேல் ஒரு தேசமானது, யாராலும் நினைத்துப்பார்க்கவே முடியாத ஆச்சரியமாகும். இப்படி நடக்கும் என்பதை எசேக்கியேல் முன்னறிவித்திருந்தார். என்னே ஆச்சரியம்!

•ஆயிரவருட அரசாட்சியைக் குறித்து பேசுகிறது.

40ஆவது அதிகாரத்தில் ஒரு புதிய தேவாலயத்தைக் குறித்த விவரித்தலை நாம் பார்க்கிறோம். இது ஆயிரவருட அரசாட்சியில் இருக்கவிருக்கிற தேவாலயத்தக்குறிக்கிறது என்று பலர் கருதுகிறார்கள். மேசியாவைக் குறித்து அதிகமாகப் பேசுகிறது.

மனுஷகுமாரன் என்ற வார்த்தை 93 முறை வந்துள்ளது. எசேக்கியேலை கிறிஸ்துவின் நிழலாமட்டமாகப் பலர் பார்க்கிறார்கள்.

எசே-11: 5 அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார், அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு, உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.

லூக்-4: 18,19 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார், தாித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார், இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும்,

நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், 19. கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார்.

•34ஆவது அதிகாரம் நல்ல மேய்ப்பரைக் குறித்து பேசுகிறது.

யோவான் 10ல் நானே நல்ல மேய்ப்பன் என்று இயேசு சொல்லியிருப்பது, எசேக்கியேலில் முன்னறிவிக்கப் பட்டிருக்கிறதைப் பார்க்கிறோம்.

எசேக்கியேல் புத்கத்தின் நோக்கம்:

தேவனைக்குறித்த அறிதலுக்குள் மக்கள் வரவேண்டும் என்பது இந்தப் புத்தகத்தின் நோக்கமாக இருக்கிறது. நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள், அல்லது நானே கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள் என்ற வார்த்தைகள் 72 முறை வந்துள்ளது. கர்த்தருடைய வார்த்தை என்ற பதம் 60 முறை வந்திருக்கிறது. அதாவது. தேவனைக்குறித்த அறிதல், தேவனுடைய வார்த்தையால் வருகிறது என்பதை இது தெளிவுபடுத்துகிறது. ஏசாயாவைப்போல, இந்தப் புத்தகத்திலும் தேவனுடைய பரிசுத்தம் முக்கியப் படுத்தப் பட்டிருக்கிறது. பரிசுத்தம் என்ற வார்த்தை 47 முறையும், பரிசுத்த ஆவியானவரைக் குறித்து 14 முறையும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்து.

எசேக்கியேலின் தொகுப்பு:

(மொத்தம் 48 அதிகாரங்கள் உள்ளன.

இவை 4 பகுதிகளாகப் பிரிக்கப்படலாம்). முதல் அதிகாரத்தில் தேவனுடைய மகிமையைக் குறித்த தரிசனம் புத்தகம் முழுவதிலும் பலமுறை தோன்றுவதை நாம் பார்க்கிறோம்.

  1. அதிகாரம் 1 முதல் 3: எசேக்கியேலின் அழைப்பும் அனுப்பப்படுதலும்
  2. எசேக்கியேல் தேவனுடைய மகிமையைப் பார்க்கிறார் (1)

† தரிசனத்தின் இடமும் நேரமும் (1: 1-3)

† நான்கு ஜீவன்கள் (1: 4-14) சேராபீன்களைக் குறிக்கிறது

† மண்டலத்தின் தரிசனம் (1: 22-25)

† மனுஷ குமாரனின் தரிசனம் (1: 26-28) இயேசு கிறிஸ்து

  1. எசேக்கியேல் தேவவார்த்தைக்குரிய கட்டளையுடன் அனுப்பப்படுதல் (2-3: 15)
  2. காவலாளனாக நியமிக்கப்படுதல் (3: 16-27)
  3. அதிகாரம் 4 முதல் 24: எருசலேமிற்கு விரோதமான தீர்க்கதரிசனங்கள்:
  4. செங்கலை வைத்து நகரத்தை வரைதல் (4: 1-3)
  5. ஒரு பக்கமாக எசேக்கியேல் படுத்திருத்தல் (4: 4-8)
  6. கெட்டுப்போன அப்பம் (4: 9-17)
  7. சவரன் கத்தியும் முடியும் (5: 1-4)
  8. தரிசனங்களின் விவரித்தல் (5: 5-17)
  9. வரவிருக்கும் நியாயத்தீர்ப்பைக் குறித்த 2 செய்திகள் (6-7)

↻ விக்கிரக ஆராதனையின் நிமித்தம் அழிவு (6)

↻ பாபிலோனின் யுத்தத்தைக் குறித்த விவரித்தல் (7)

  1. வரவிருக்கும் நியாயத்தீர்ப் பைக்குறித்த 4கோண தரிசனங்கள் (8-11)

∗ தேவனுடைய மகிமையின் தரிசனம் (8: 1-4)

∗ தேவாலயத்தில் அருவருப்புக்களின் தரிசனம் (8: 5-18)

∗ எருசலேமில் வெட்டப்படுதலின் தரிசம் (9)

∗ தேவனுடைய மகிமை விலகுதல் (10: 1-8)

∗ நான்கு சக்கரங்கள், சேராபீன்களின் தரிசனம் (10: 9-22)

∗ 25 துன்மார்க்க ராஜாக்களின் தரிசனம் (11: 1-12)

∗ மீந்திருப்யுத்தம் புதுப்பிக்கப் படுதலின் வாக்குத்தத்தம் (11: 13-21)

∗ ஒலி மலையிலிருந்து தேவமகிமை விலகிச்செல்லுதல் (11: 22-25)

  1. அடையாளங்கள், உவமைகள், செய்திகள் (12-24)
  2. கள்ளத்தீர்க்கதரிசிகள் (13) நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்
  3. மூப்பர்களுக்கு விரோதமான செய்தி (14) நோவா, தானியேல் யோபு காப்பாற்றமுடியாது.
  4. சிங்கமும் திராட்சைச்செடியும் உவமை (15)
  5. இஸ்ரவேலின் விவாகத்தின் உவமை (16)- எருசேலம் வேசியானது
  6. இரண்டு கழுகுகளின் உவமை (17)
  7. தனிப்பட்ட நபரின் பாவத்திற்குரிய தண்டனை (18) பாவம்செய்த ஆத்துமாவே சாகும்.
  8. இஸ்ரவேலின் தலைவர்களுக்கான புலம்பல் (19: 1-9)
  9. காய்ந்துபோன திராட்சைச் செடியின் உவமை (19: 10-14)
  10. முரட்டாட்டமுள்ள இஸ்ரவேல் (20)
  11. தேவனுடைய பட்டயமாக பாபிலோன் (21)
  12. இரண்டு சகோதரிகள் (22) அகோலாள்-சமாரியா, அகோலிபாள்-எருசலேம்
  13. எருசலேமின் சிறைபிடிப்பு (24)

III. அதிகாரம் 25 முதல் 32: மற்ற தேசங்கள்மீது நியாயத்தீர்ப்பு

  1. அம்மோன் (25: 1-7)
  2. மோவாப் (25: 8-11)
  3. ஏதோம் (25: 12-14)
  4. பெலிஸ்தியா (25: 15-17)
  5. தீரு (26 முதல் 28: 19) சாத்தானைக்குறித்த குறிப்புகள் இங்கே இருக்கிறது.
  6. சீதோன் (28: 20-26)
  7. எகிப்து (29-32)
  8. அதிகாரங்கள் 33 முதல் 48: தன் மக்கள்மீதான ஆசிர்வாதம்:
  9. எசேக்கியேல் காவற்காரனாக நியமிக்கப்படுதல் (33)
  • எசே-33: 7 மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன், ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
  1. மேய்ப்பர்களுக்குரிய செய்தி (34)
  2. சேயீராகிய ஏதோமுக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு (35)
  3. இஸ்ரவேல் புதிய இருதயத்தையும், ஆவியையும் பெற்றுக்கொள்ளும் (36)
  4. உலர்ந்த எலும்புகள் (37)- இஸ்ரவேலின் புதுப்பிக்கப்படுதலைக் குறித்தது
  5. வட ராஜாக்களும், கோகும் மாகோகும் (38-39)
  6. புதிய தேவாலயம் (40-43)
  7. புதிய ஆராதனை (44-46)
  8. ஆலயத்திலிருந்து தண்ணீர் பாய்ந்துவருதல், கனிகொடுக்கும் மரங்கள் (47: 1-12)
  9. புதிய தேசம் (47: 13 முதல் 48).