ஆமோஸ்

  1. ஆமோஸ் - "சமூக நீதிக்கான அழைப்பு; ஏழைகளுக்கான நீதி"

     

    1. அமைப்பு:

    ஆமோஸின் புத்தகம், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய உலகிற்குத் தேவையான அநேக நடைமுறைக் காரியங்களை உடையதாக இருக்கிறது. இப்புத்தகத்தில் சொல்லப் பட்டிருப்பதுபோன்ற அநேக காரியங்களில், அநேகர் இப்பொழுதும் சிக்கியிருப்பதை நாம் பார்க்கிறோம். ஆமோஸில் சொல்லப்பட்டிருக்கும் அநேககாரியங்கள் வடராஜ்யமாகிய இஸ்ரவேல் தேசத்தில் நடைபெற்றவைகளாகும். இது கி.மு.767 முதல் 753ன் காலங்களுக்கு உட்பட்டதாக இருக்கிறது. யூதாவின் ராஜாவாகிய உசியா, மற்றும் இஸ்ரவேலின் ராஜாவாகிய 2ஆம் யெரொபெயாமின் நாட்களின்போது, தாம் ஊழியம்செய்ததாக ஆமோஸே சொல்வதால், இந்தக்காலத்தை நாம் அறிந்துகொள்கிறோம். உசியா ராஜாவின் ஆட்சிக்காலம் கி.மு.767 முதல் 739 ஆகும். 2ஆம் ரெகொபெயாமின் ஆட்சிக்காலம் கி.மு.782 முதல் 753 ஆகும்.

    எலிசாவின் ஊழியத்திற்கு 50 ஆண்டுகள் கழித்து, யோவேல், யோனா தீர்க்கதரிசிகளுக்குச் சற்று பிறகு, ஓசியா தீர்க்கதரிசனம் உரைக்க ஆரம்பிக்கத் துவங்கின நாட்களில், மீகா, மற்றும் ஏசாயாவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆமோஸ் ஊழியம் செய்தார். இஸ்ரவேல் தேசம் மிகுந்த செழிப்பையும், ஆசீர்வாதத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில், மக்கள் சுகபோகத்தோடு வாழ்ந்து உலகப்பிரகாரமாக, சொத்துக்களைச் சேர்த்தல், பொருட்களை வாங்குதல் என்பவைகளில் அதிகமாக மூழ்கிக் கொண்டிருந்தார்கள்.

    ஆமோ-3: 15 மாரிகாலத்து வீட்டையும், கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன், அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும், பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    மற்றொரு பக்கத்தில் இஸ்ரவேலின் இராணுவம் மிகவும் வலிமைவாய்ந்த நிலையில் இருந்துகொண்டிருந்தது, இந்த நாட்களில் அசீரியா, பாபிலோன், சீரியா மற்றும் எகிப்தின் இராணுவங்கள் மிகவும் பெல வீனமானவைகளாக இருந்துகொண்டிருந்தன. ஆகவே அண்டைநாடுகளின் தாக்குதலைக்குறித்த எந்தவிதமான பயமும் அவர்களுக்கு இல்லை. வசதிகளும், சுகபோகமும் இஸ்ரவேல் மக்களை ஒழுக்கக்கேட்டிற்கும், அநியாயங்களுக்கும் நடத்திச்சென்றது. இப்படிப்பட்ட காரியம் இன்றைக்கும் உலகத்தில் காணப்படுகிறது உண்மைதானே!

    ஆமோ-6: 4-7 தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று, 5. தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, 6. பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள், ஆனாலும் யோசேப்புக்கு நோிட்ட ஆபத்துக்குக் கவலைப் படாமற்போகிறார்கள். 7. ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள், இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும்.

    இந்தச் சூழலில், வரவிருந்த பேரழிவைக்குறித்து ஆமோஸ் முன்னறிவித்ததை மக்களால் கற்பனைசெய்துகூடப் பார்க்கமுடியவில்லை. ஆனால், ஆமோஸ் தீர்க்கதரிசனம் உரைத்த காரியங்கள், 30 ஆண்டுகளில் நிறைவேறுதலுக்கு வந்தது.

    2. தீர்க்கதரிசி ஆமோஸ்:

    ஆமோஸ் ஒரு பிரபல்யமான நபரல்ல, மாறாக ஆடுமேய்ப்பவனாகவும், விவசாயியாகவும் வாழ்ந்துகொண்டிருந்தார். அப்படிப்பட்ட நபரைத் தீர்க்தரிசன ஊழியத்திற்கு அழைத்து தேவன் பயன்படுத்தினார்.

    ஆமோ-1: 1 தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமிஅதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்.

    ஆமோ-7: 14 ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல, நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப் பழங்களைப் பொறுக்குகிறவனுமாய் இருந்தேன்.

    தெக்கோவா என்பது பெத்லகேமிற்குத் தெற்கே 5 மைல், எருசலேமற்குத் தெற்கே 10 மைல் தொலைவில் உள்ள மலையிலிருக்கும் ஒரு கிராமமாகும். இதுகள் ஆடுகள் பெருகத்திற்குப் பேர்போன இடமாக இருந்தது. தேக்கோவா ஊர் மேய்ப்பர் என்றால் அவர்களை புண் படுத்துதலுக்கேதுவான அழைப்பாகும், காரணம் அந்த ஊரின் ஆட்டுத்தோல்கள் தரமற்றவைகளாக இருந்ததால், மற்ற ஊர்க்காரர்கள் இவர்களை அற்பமாகப் பார்த்தார்கள். இவ்வாறு அற்பமாகப் பார்க்கப்பட்ட ஒரு ஆடுமேய்க்கிறவனை, செழிப்பில் மிதந்துகொண்டிருந்த தேசத்திற்குச் சென்று, அதற்கு விரோதமாக நியாயத் தீர்ப்பைக்குறித்து தீர்க்கதரினசம் உரைப்பாயாக என்று தேவன் அனுப்புகிறார். ஆமோஸ் தன் ஊழியத்தை ஆரம்பித்து தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தபோது, அங்கிருந்த செல்வந்தர்களும், சுகபோகமாக வாழ்ந்தவர்களும் அவரை எவ்வாறு பார்த்திருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள். அவர்களிடம் பக்திச்செயல்கள் இருந்தன. பெத்தேலுக்கும் கில்காலுக்கும் சென்று பலிசெலுத்தினார்கள். ஆனால் அவர்களிடம் நீதிச்செயல்கள் இல்லை.

    ஆமோ-5: 11,23 நீங்கள் தாித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமை சுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை, இன்பமான திராட்சத் தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை. 23. உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று, உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன்.

    இன்றைக்கும் தேவன் அழைத்துப் பயன்படுத்தும் நபர்களும், தேவன் அவர்களை அனுப்புகிற மக்கள் கூட்டமும் இதேபோல இருப்பதை நாமும் பார்க்கிறோமல்லவா? ஆனாலும், ஆமோஸ் சொன்னபடியே பூமியதிர்ச்சி வந்ததைக்குறித்து நாம் துல்லியமாக அறியமுடிகிறது, ஆனால் அந்தப் பூமியதிர்ச்சி எந்த வருடத்தில் நடந்தது என்ற நமக்குத் துல்லியமாகத் தெரியவில்லை. ஆனாலும் 240 ஆண்டுகளுக்குப் பிறகும் அது அடையாளமாகச் சுட்டிக்காட்டப்படுதலை சகரியாவின் புத்தகத்தில் வாசிக்கிறோம்.

    சகரி-14: 5 அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள், மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும், நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள், என் தேவனாகிய கர்த்தர் வருவார், தேவாிரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.

    ஆமோஸ் மூலமாச் சொல்லபட்ட தீர்க்கதரிசனத்தின்படி நடந்த பூமியதிர்ச்சியின்போது, ஒரு மலையே பாதியாகப் பிளவுபட்டு, கிழக்கே ஒன்றரை மைல் தொலைவிற்குப் பெயர்ந்துபோயிருந்ததாம். இதைக்குறித்து, இது ஆசாரியர்கள் உசியாவைக் கண்டித்த சமயத்தில் நடைபெற்றது என்று ஜொசேப்பஸ் என்ற யூதசரித்திர ஆய்வாளர் சொல்கிறார்.

    2நாள்-26: 16-21 அவன் (உசியா ராஜா) பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல்செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். 17. ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து, 18. ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல, தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும், பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம், மீறுதல்செய்தீர், இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள். 19. அப்பொழுது உசியா கோபங்கொண்டான், அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று. 20. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்று கண்டு, அவனைத் தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப் படப்பண்ணினார்கள், கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத் தீவிரப்பட்டான். 21. ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப் பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான், அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக் காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம்விசாரித்தான்.

    இதன் அடிப்படையில் பார்த்தால், பூமியதிர்ச்சி வந்ததற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக, கி.மு.752ல் ஆமோஸின் புத்தகம் கணக்கிடப்படலாம்.

    3. செய்தி:

    8 தேசங்களைக்குறித்த மூன்று பாதகங்கள், நாலு பாதங்கள் என்ற நீண்ட செய்தியை ஆமோஸ் ஆரம்பித்தார்.

    ஆமோ-1: 3 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன், அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் போரடித்தார்களே. (1: 6, 9, 11, 2: 1, 4, 6)

    மூன்று, நான்கு என்ற இதேபோன்ற பதங்களை ஆமோஸ் திரும்பத்திரும்பப் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அழுதத்ததைக் குறிப்பதற்காக இப்படிச்சொல்கிறார் என்று சிலர் கருதுகிறார்கள், நான்காவது பாவத்தை முக்கியப்படுத்துவதற்காக, அதைத் தனித்துக் குறிப்பிட்டிருக்கிறார் என்று சிலர் கருதுகிறார்கள். மூன்றையும் நான்கையும் கூட்டி 7 என்ற முழுமையைக் குறிப்பதற்காக இப்படிச் சொல்கிறார் என்றும் சிலர் கருதுகிறார்கள்.

    உதாரணத்திற்கு:

    யோபு-5: 19 ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார், ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.

    எதுவாக இருந்தாலும் சரி, வலியுறுத்திக் கூறுவதற்காக அவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். சிங்கம் (தேவன்) ஒவ்வொரு பகுதிக்கும் விரோதமாகச் கெர்ச்சிக்கிறது, முதலாவது சீரியாவின் தலைநகரமாகிய தமஸ்கு ஒன்றுமில்லாமல் போகிறது, இரண்டாவதாக பெலிஸ்தியர்களின் முக்கிய நகரமாகிய காசா முடிவிற்கு வருகிறது, அடுத்து தீரு அழிக்கப்படுகிறது, அதற்கடுத்து ஏதோம் பாழாக்கப்படுகிறது, தொடர்ந்து அம்மோன் அழிக்கப்படுதல், மோவாப் அழிக்கப்படுதல் நடைபெறுகிறது.

  1. அடுத்ததாக, யூதாவுக்கும் இறுதியில் இஸ்ரவேலுக்கும் விரோதமாக வருகிறது. சொல்லப்பட்ட இவைகள் 40 ஆண்டுகளுக்குள் நிறைவேறுதலுக்குள் வந்தன.

    8 தேசங்களின் பாவங்களும் தண்டனையும் நிறைவேறுதலும்:

    1. தமஸ்கு (சீரியா):

    பாவம்: கொடூரம் 1: 3 அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் போரடித்தார்களே.

    தண்டனை: 1: 5 அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்கு (இன்றைய வடக்கு ஈராக்) சிறை பட்டுப்போவார்கள்.

    நிறைவேறியது: இது கி.மு.732ல் நிறைவேறியது.

    1. காசா:

    பாவம்: சதித்திட்டம் 1: 6 அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே.

    தண்டனை: 1: 8 சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவார்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன்.

    நிறைவேறியது: கி.மு.734ல் அசீரியர்களாலும், கி.மு.168 முதல் 134ல் மக்கபேயர்களாலும் இது நிறைவேறியது.

    1. தீரு (இன்றைய தென் லெபனான்):

    பாவம்: உடன்படிக்கையை மறந்து சகோதரரைத் தீங்குக்குட்படுத்துதல் 1: 9 அவர்கள் சகோதரரின் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்பித்தார்களே.

    தண்டனை: 1: 10 தீக்கொளுத்துவேன், அது அதின் அரமனைகளைப் பட்சிக்கும்.

    நிறைவேறியது: இது கி.மு.332ல் மகாஅலெக்ஸாண்டர் 7 மாதங்களுக்கு அதைச் சிறைப்பிடித்து, அதிலிருந்த 6000 நபர்களைக் கொன்று, 2000 பேரைச் சிலுவையில் அறைந்து, 30,000 பேரை அடிமைகளாக விற்றபோது நிறைவேறியது.

    1. ஏதோம் (தெற்கு யோர்தான் மற்றும் சவுதி அரேபியா):

    பாவம்: இரக்கமின்றிக் கொல்லுதல் 1: 11 அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே.

    தண்டனை: 1: 12 தேமானிலே தீக்கொளுத்துவேன், அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும்.

    நிறைவேறியது: அசீரியா இதைக் கீழ்ப்படுத்தியபோது இது நிறைவேறியது. (போஸ்றா: இன்றைய சவுதி அரேபியாவின் தலைநகர்)

    1. அம்மோன் (இன்றைய வடக்கு யோர்தான்):

    பாவம்: பேராசை 1: 13 அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும் படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரிகளைக் கீறிப்போட்டார்களே.

    தண்டனை: 1: 15 அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப் போவார்கள்.

    நிறைவேறியது: இது கி.மு.734ல் ஆசீரியா தன் கட்டுப்படடை எடுத்தபோது நிறைவேறியது.

    1. மோவாப் (இன்றைய மத்திய யோர்தான்):

    பாவம்: பழிவாங்குதல் 2: 1 அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.

    தண்டனை: 2: 2-3 மோவாப்தேசத்தில் தீக்கொளுத்துவேன், அது கீரியோத்தின் அரமனைகளைப் பட்சிக்கும், மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள். 3. நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடேகூட அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன்.

    நிறைவேறியது: இதுவும் கி.மு.734ல் அசீரியாவால் நிறைவேறியது.

    1. யூதா:

    பாவம்: தேவனுடைய வேதத்தை மறந்தது 2: 4 அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.

    தண்டனை: 2: 5 யூதாவிலே நான் தீக்கொழுத்துவேன், அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும்.

    நிறைவேறியது: இது கி.மு. 586ல் பாபிலோன் தன் கட்டுப்பாட்டை எடுத்தபோது நிறைவேறியது. (தேவனுடைய வார்த்தையைப் பெற்று, அதை அறிந்தும் நாம் அதைக் கைக்கொள்ளத் தவறும்போது, அது நமக்கு நல்லதல்ல).

    (முதலாவதாக, பாவம்செய்த மற்ற தேசங்களைக்குறித்து தேவன் நியாயந்தீர்ப்பாரானால், இஸ்ரவேலே உங்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று ஆமோஸ் சொல்ல ஆரம்பிக்கிறார்.)

    1. இஸ்ரவேல்:

    பாவம்: தேவஜனங்களை மோசமாக நடத்துதல்: 2: 6-8,12 அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே. 7. அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள், என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள். 8. அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப் பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள். 12. நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.

    தண்டனை: 2: 14-16 அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை, பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை, பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை. வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை, வேகமானவன் தன் கால்களால் தப்பிப்போவதுமில்லை, குதிரையின்மேல் ஏறுகிறவன் தன் பிராணனை இரட்சிப்பதுமில்லை. 16. பலசாலிகளுக்குள்ளே iதாியவான் அந்நாளிலே நிர்வாணியாய் ஓடிப்போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

    நிறைவேறியது: இது கி.மு.722ல் அசீரியா தன் கட்டுப்பாட்டை எடுத்தபோது நிறைவேறியது.

    ஆமோஸின் புத்தகம் பாவங்களின் பட்டியலோடு ஆரம்பித்து, நம்பிக்கையோடு முடிகிறது. திரும்பத்திரும்ப மீறுதலுக்குள் செல்லுதல், நியாயத்தீர்ப்புக்கு நடத்திச்செல்லும் என்பதை இந்தப் புத்தகம் கற்றுக்கொடுக்கிறது.

    ஆமோஸ் புத்தகத்தின் தொகுப்பு:

    (மொத்தம் 9 அதிகாரங்கள் உள்ளன. இதை 4 பகுதிகளாகப் பிரிக்கலாம்)

    1. அதிகாரங்கள் 1-2: தேசங்களின் அழிவு
    2. அதிகாரம் 3: 1-8: தீர்க்கதரிசன அழைப்பு

    III. அதிகாரங்கள் 3: 9 முதல் 9: 10 வரை: இஸ்ரவேலின் நியாயத்தீர்ப்பு

    அ. சமாரியா நியாயந்தீர்க்கப்படும் (3: 9 முதல் 4: 5)

    ஆ. தேவனுடைய கடந்தகால நியாயத்தீர்ப்புகள் (4: 6-13)

    இ. இஸ்ரவேலுக்கான புலம்பல் (5)

    ஈ. நிர்விசாரமாய் இருப்போருக்கு ஐயோ (6)

    உ. தரிசனங்கள் (7 முதல் 9: 10)

    1. வெட்டுக்கிளிகள் (7: 1-3) பஞ்சமா? இல்லை
    2. அக்கினி (7: 4-6) அக்கினியால் பட்சிக்கப்படுமா? இல்லை
    3. தூக்குநூல் (7: 7-9) மன்னிக் கமாட்டேன்
    4. பழுத்த பழங்களுள்ள கூடை (8) நியாந் தீர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
    5. ஆண்டவரின் தரிசனம் (9: 1-10) நியாயந் தீர்க்குதலைக் கர்த்தரே மேற்ப் பார்வையிடுவார்.
    6. அதிகாரம் 9: 11-15: புதுப்பிக்கப்படுதல்
    சுருக்கமாக:

    † அதிகாரங்கள் 1 முதல் 2ல், 8 தீர்க்கதரிசனங்கள்

    † அதிகாரங்கள் 3 முதல் 6ல், 3 செய்திகள்

    1. இஸ்ரவேலின் நிகழ்காலம்: தேவன் தாம் நேசிப்பவர்களைச் சிட்சிக்கிறார் (3: 1-15)
    2. இஸ்ரவேலின் கடந்தகாலம்: உன் தேவனைச் சந்திக்க ஆயத்தப்படு (4: 1-13 பெண்கள் ஆண்களை இயக்குதல், மழை தடுக்கப்பட்டது 4: 1-3)
    3. இஸ்ரவேலின் வருங்காலம்: நீங்கள் பிழைத்திருக்கும்படி என்னைத் தேடுங்கள் (5 முதல் 6)

    ∗ அதிகாரங்கள் 7 முதல் 8ல், 5 தரிசனங்கள்

    ∗ அதிகாரங்கள் 9-ல், 5 வாக்குத்தத்தங்கள் உள்ளன.

    9: 11 ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக் கொள்ளுவேன்.

    9: 12 அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன்.

    9: 13 இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சப்பழங்களை ஆலையாடுகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, பர்வதங்கள் திராட்சரசமாய் வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும்.

    9: 14 என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன், அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.

    9: 15 அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன், நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப் படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்